நம் முன்னோர்களின் சிந்தனை எப்போதுமே விசாலமானதுதான். அவர்கள் உலகளாவிய அல்லது பிரபஞ்சப் பார்வையுடனேயே திகழ்ந்து இருந்தார்கள். ஒட்டு மொத்த உயிர்குலத்தையும் ஒரே இனமாகப் பார்த்தார்கள். அவர்களின் பிரார்த்தனைகள், எல்லோரும் சமம்; எல்லார்க்கும் எல்லாம் என்பதாகவே இருந்துள்ளது.
உலகில் இன்று நாம் தேசத்தால், மொழியால், சாதியால், நிறத்தால் நம்மை பேதப்படுத்திக் கொண்டுள்ளோம். ஆனால், நம் முன்னோர்கள் உலகத்தை, எல்லா உயிர்களும் ஒருங்கிணைந்த ‘வசுதேவ’ குடும்பமாகத்தான் கண்டார்கள்.
தமிழில் கணியன் பூங்குன்றனரால் எழுதப்பட்ட புறநானூற்று பாடல் ஒன்று இதற்கு சாட்சியாக உள்ளது.
இப்பாடலின் முதல் இரண்டு வரிகள் நம்மிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக எழுதிய கவிதையில் கூட அந்த இரண்டு வரிகள் இடம்பெற்று உள்ளது.
”யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர் தர வாரா;”
இவ்விரண்டு வரிகளுக்கு பின்னால் வாழ்வை பற்றிய தன் நோக்கை பதினோறு வரிகளில் பாடியுள்ளார் கணியனார்.
எல்லா ஊரையும் தமது ஊராகவும், எல்லோரையும் தம் உறவினராகவும் காணுமிவர், கெட்டதும் நல்லதும் நாம் அனுமதிக்காமல் நம்மிடம் வாராது என்கிறார். அதுப்போலவே வருத்தமும் பின் அவ்வருத்தத்தை தணித்துக் கொள்ளுதலும் நாமாக நமக்கு செய்துகொள்ளலே என்றுரைக்கிறார்.
மேலும்,
மரணமெனும் நிகழ்வு இந்த பூமிக்கு புதியதன்று.
ஆகையால் வாழ்பவனாகிய நான் இதைக் கருத்தில் கொண்டு வாழ்க்கை இனிமையானது என்று அதிகம் மகிழ்ந்தது இல்லை.
விரும்பியது கிடைக்காவிட்டாலும் வாழ்வின் மீது எமக்கு கோபத்தினால் உண்டாகும் வெறுப்பும் இல்லை.
மின்னல் தெறித்து மழையாகக் கொட்டிடும் நீர்த்துளிகள் ஒன்றாக திரண்டு கற்களில் உருண்டிடும் ஆற்றுவெள்ளம் போல் வாழ்க்கை அதன் போக்கில்தான் செல்லும் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டோம்.
அதனால் பெரியவர்களைக் கண்டு வியந்து போதல் இல்லை. அதைவிட, முக்கியமாக சிறியவர்களை இகழ்ச்சி செய்தல் இல்லை என்கிறார்.
முதல் இரண்டு வரிகளை மட்டும் அதிகமாக பேச்சளவில் பயன்படுத்தும் நாம், அதன்பின் வரும் வாழ்வியல் தத்துவத்தை ஏன் பிரபலமாக்கவில்லை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துவதற்கு கடினமாகக் கருதித் தவிர்த்துவிட்டோமோ?
முழுப்பாடல் இதோ இங்கே:
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர் தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;
சாதலும் புதவது அன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னாது என்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண் துளி தலைஇ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்ல்ல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர்
முறை வழிப்படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம்ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
- கணியன் பூங்குன்றனார், பொதுவியல் திணை, பொருண்மொழிக் காஞ்சி துறை, புறநானூறு
-ஸ்ரீசக்திப்ரியன்
No comments:
Post a Comment