Saturday, June 29, 2013

இதுவும் கடந்து போகுமென….




துன்பம் வந்த போது
இதுவும் கடந்து போகுமென எண்ணினேன்.
விளைந்த பக்குவத்தால்
இன்பம் வந்த போதும்
இதுவும் கடந்து போகுமென எண்ணினேன்.

கடந்து போனதெல்லாம்
மறைந்து போகவில்லை – அதன்
பாதச்சுவட்டை ஆழப்
பதித்துவிட்டே போயுள்ளது.

இருப்பிற்கும்
இறப்பிற்கும்
முன்னும் பின்னும்
கடக்க காத்திருப்பவைகள் என்னவோ?

கடப்பது நில்லாது
காண்பதும் நில்லாது

கடப்பதை காணுபவன் எவனோ
அவனைக்
கண்டுவிட்டால்
கடப்பதற்கு ஏதுமில்லை
காண்பதற்கும் ஏதுமில்லை

-   ஸ்ரீசக்திப்ரியன்

Wednesday, June 26, 2013

காமம் - ஜே.கே-வின் பதில்



கேள்வி:  உலகத்தில் உள்ள ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் காமம் ஏன் மிக முக்கிய பங்கு வகிக்கிறது?

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பதில்:
குறிப்பிடும்படியாக ஒரு தத்துவம், அதுவும் இந்தியாவில் ‘தந்த்ரா’ என்று அழைக்கப்படுகிறது.  அதன் ஒரு பகுதி காமத்தை ஊக்குவிக்கிறது.  காமத்தின் மூலம் நீங்கள் நிர்வாணத்தை (ஆடைகளற்றதல்ல.. ஆசைகளற்றது) அடையலாம் என்று சொல்லுகிறது.  அது உங்களை ஊக்குவிக்கிறது; நீங்கள் அப்படியே உங்கள் காமத்திற்கு அப்பால் செல்லுவீர்கள் என்று.  ஆனால், நீங்கள் அதை என்றுமே செய்ததில்லை. 
நம் வாழ்க்கையில் காமம் முக்கியமாகிவிட்டது ஏன்? அது அப்படியே என்றானால், இந்த நிகழ்காலத்தில் மட்டுமல்ல எல்லாக் காலங்களிலும் அப்படியேதான் உள்ளது. குழந்தைகளை உற்பத்தி செய்வதில் இருந்து வேறாக -மனிதனிடத்தில் காமம் மிக ஆழமாக ஊடுருவி உள்ளது ஏன்?. நான் குழந்தை பெறுவதைப் பற்றி பேசவில்லை.  ஏன்?  பெரும்பாலும் மனிதகுலத்திற்கு அதுவே மிகச் சிறந்த மகிழ்வை வழங்குவதால்.  அந்த மகிழ்வை வேண்டியே எல்லாவிதமான குழப்பங்களும் தோன்றின; இந்த உளரீதியான சிக்கல்களுக்கு விளக்கங்கள் பக்கம் பக்கமாக எழுதப்பட்டுள்ளன.   ஆனால், அதன் ஆசிரியர்கள் மனிதகுலம் காமத்திற்கு ஏன் இவ்வளவு அதீத முக்கியத்துவத்தை  அவர்கள் வாழ்க்கையில் உண்டாக்கியுள்ளார்கள் என்ற கேள்வியை எப்போதும் கேட்டதேயில்லை.

கலக்கத்தில் இருக்கும் நம் வாழ்க்கை, அதன் தொடர்ச்சியான போராட்டம், உண்மையின்றி, படைப்புத் திறன் அற்றதாய் – ’படைப்புத் திறன்’ என்ற வார்த்தையை நான் மிகவும் கவனமாகப் பயன்படுத்துகிறேன். ஒரு ஓவியர், கட்டிட வரைவாளர், மரச்சிற்பி தன்னை படைப்பாளராக சொல்லிக் கொள்ளலாம். சமையலறையில் ரொட்டி சுடும் பெண் ஒரு படைப்பாளி என்றே கூறப்பட்டிருக்க  வேண்டும். பின் அவர்கள் சொல்கிறார்கள் காமமும் ஒரு படைப்புத்திறனே என்று. ஆக, படைப்புத்திறத்துடன் இருத்தல் என்பது என்ன?.  ஒரு ஓவியன், இசையமைப்பாளன், பக்தியுடன் இருக்கும் இந்திய பாடகர்கள் என்று இவர்கள் எல்லாம் சொல்லிக் கொள்ளலாம் தங்களிடமிருந்து வெளிப்படுவதே படைப்புத்திறன் என்று.  அப்படியா?  ஒரு மூக்கை மூன்று முகங்களுக்கு வைத்து அல்லது வேறு எப்படியோ வரையும் பிக்காஸோவை நீங்கள் ஒரு தலைச்சிறந்த ஒவியனாகவும், தலைச்சிறந்த படைப்பாளியாகவும் ஒத்துக் கொண்டுவிட்டீர்கள். அதை நான் மறுக்கவில்லை அல்லது அதன் மதீப்பீட்டை குறைக்கவுமில்லை. நான் அதை சாதாரணமாகத்தான் குறிப்பிடுகிறேன்.  படைப்பு என்று என்ன சொல்லப்படுகிறது என்றால் இதைத்தான். ஆனால், இவை எல்லாமா படைப்பு? அல்லது படைப்பு என்பது இதிலிருந்து முற்றிலும் வேறானதா?  இசையில், சிலையில், வசனத்தில், கவிதையில், ஓவியத்தில் படைப்பின் உணர்வு வெளிப்பாட்டை நீங்கள் காண்கிறீர்கள்.  அது ஒரு மனிதனின் சாமர்த்தியத்தை அவனது அறிவுத்திறனை சிறிய அளவிலோ அல்லது பெரியதாகவோ வெளிப்படுத்துகிறது.  அது புதுமையான ராக் அல்லது பாச் (Rock or Bach) ஆக இருக்கலாம் – இவை இரண்டையும் ஒப்பீடு செய்வதற்கு நான் வருந்துகிறேன்; அவைகள் ஒப்பிட முடியாதவை.  பதவி, பணம், புகழை கொண்டு வருவதனால் இவற்றை எல்லாம் மனிதகுலமாகிய நாம் படைப்பு என்று ஒப்புக் கொள்கிறோம். ஆனால், நான் கேட்கிறேன்; இதுவா படைப்பு?

எதுவரையிலும் வெளிப்புறச் சந்தை நமக்களிக்கும் அங்கீகாரம், பணம் மற்றும் வெற்றிக்கான தேவை இருக்கின்ற போது எதுவரையிலும் சுயநலம் இருக்கின்ற போது, மிகவும் ஆழங்காண முடியா உணர்வை குறிக்கும் வார்த்தையான படைத்தல் என்பது அதில் இருக்குமா? தயவு செய்து என்னுடன் ஒத்துப் போகாதீர்கள்.  நான் சாதாரணமாகத்தான் குறிப்பிடுகிறேன்.  படைப்பை பற்றி எனக்குத் தெரியுமென்றோ உங்களுக்கு தெரியாதென்றோ நான் சொல்லவில்லை. நான் அதைச் சொல்லவில்லை. இவ்விஷயங்களைப் பற்றி எப்பொழுதும் நாம் கேள்வி எழுப்பியதே இல்லை என்றே சொல்லுகிறேன்.  சுயநலத்தின் சுவடு படியாத இடத்தில் படைப்பு என்னும் நிலை இருக்கிறது என்பதையே நான் சொல்லுகிறேன்.  அதுவே உண்மையான படைப்பாகும். தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் தேவை அதற்கில்லை; சுயதிருப்தியும் அதற்கு தேவையில்லை. இப்படிப்பட்டதுதான் படைப்பு.

படைப்புத்திறன் உடையதாகவும் முக்கியத்துவம் பெற்றதாகவும் காமம் எண்ணப்படலாம். ஏனெனில் நம் வேலை, அலுவலகம், சர்ச்-க்கு செல்லுதல், ஒரு குருவையோ அல்லது தத்துவவாதியோ தொடர்தல் என்பனவெல்லாம் எப்போதும் நம்மை சுற்றிச் சூழ்ந்துள்ளன.  இவையெல்லாம் சுதந்திரத்தில் இருந்து நம்மை விலக்குவதாக உள்ளது.  மேலும், எப்போதும் நம்முடன் இருக்கும் கடந்த காலம் என்னும் நமது சொந்த அறிவிலிருந்து விடுதலையற்றவர்களாகவும் இருக்கிறோம்.

ஆக, நாம் உள்முகமாகவும் வெளிமுகமாகவும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாமல் தடைசெய்யப்பட்டவர்களாக இருக்கிறோம்; தலைமுறை தலைமுறையாக நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.  எனக்கு என்ன தேவையோ அதை நோக்கியே நான் செயல் செய்வேன் என்பதே அதன் எதிர்விளைவாக இருக்கிறது. அவ்விளைவும் மகிழ்ச்சி, ஆசை, சாமர்த்தியம் என்பதை அடிப்படையாக கொண்டு வரையறுக்கப்பட்டு விடுகிறது.  ஆக, உள்முகமாகவோ அல்லது வெளிமுகமாகவோ முக்கியமாக உள்முகமாக, விடுதலை என்பது இல்லையோ அப்பொழுது நம்மிடம் இருப்பது ஒன்றே ஒன்றுதான். அதுதான் காமம் என்றழைக்கப்படுகிறது.  ஏன் நாம் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? நீங்கள் அச்சத்தில் இருந்து வெளி வருவதற்கு இதே அளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா?  இல்லை.  துயரத்தை முடிவுக்கு கொண்டு வர இதே அளவு சக்தியை, உயிர்த்துடிப்பை மற்றும் எண்ணத்தை கொடுக்கிறீர்களா? காமத்திற்கு மட்டுமேன்?  ஏனெனில் காமம் நீங்கள் கையாளுவதற்கு சுலபமாக இருக்கிறது; மற்றவை எல்லாம், எப்பொழுது நீங்கள் விடுதலையுடன் இருக்கிறீர்களோ அப்பொழுது மட்டுமே வெளிப்படும் உங்களுடைய சக்தியை கேட்கிறது. ஆகையால், இயற்கையாகவே உலகம் முற்றிலும் உள்ள மனிதகுலம் இவ்விஷயத்திற்கு (அதாவது காமத்திற்கு) உச்சபட்ச முக்கியத்துவத்தை வாழ்க்கையில் அளித்துவிட்டது.  எப்பொழுது நீங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதிக்கு மட்டுமே அதீத முக்கியத்துவம் அளிக்கிறீர்களோ அப்பொழுது உங்களை நீங்களே அழித்துக் கொள்கிறீர்கள்.  வாழ்க்கை என்பது முழுமையானது; வெறும் ஒரு பகுதி அல்ல.  முழுமைக்கு உங்களால் முக்கியத்துவம் கொடுக்க முடியுமானால்  அப்பொழுது காமம் என்பது அதீத அல்லது குறைந்த முக்கியத்துவம் அற்றதாய் ஆகிவிடும். காமத்தை மறுக்கும் சந்நியாசிகள் தங்கள் சக்தியை கடவுளின் மேல் திருப்புகிறார்கள்; ஆனால் உள்ளே அது கொதித்திக் கொண்டுதானிருக்கும்.  இயற்கையை அடக்க முடியாது. ஆனால் அதற்காக எல்லாவிதமான முக்கியத்துவத்தையும் அதன் மேலே நீங்கள் செலுத்தினீர்கள் என்றால் நீங்கள் பழுதடைவீர்கள்.