Thursday, December 15, 2011

மதமாற்றம்

மதமாற்றம் பற்றி காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் உரைத்தது. (தெய்வத்தின் குரல் என்ற நூலில் இருந்து)

மதமாற்றம் செய்கிறவர்களை நாம் வெறுக்க வேண்டியதில்லை. கட்டாயப்படுத்தியாவது, ஆசை காட்டியாவது அவர்கள் அப்படிச் செய்ய முயலுவதன் காரணம், அவர்களுக்குத் தங்கள் மதமே பரமசத்தியம் என்ற நம்பிக்கை இருப்பதுதான். இதைப் பிறரும் ஏற்றால்தான் மற்றவர்களுக்குக் கதிமோட்சம் உண்டு. இப்படி அவர்கள் பிறருக்கு ஒரு நன்மையைச் செய்வதற்காகப் பலவந்தம், வசியம், பணம் ஆகியவற்றைப் பயன்படுத்தினால் கூடத் தவறில்லை என்ற நல்லெண்ணத்திலேயே அவர்கள் பிறமதத்தினரைத் தமது மதத்துக்கு மாற்றம் செய்ய முயலுகிறார்கள் என்றே வைத்துக் கொள்ளலாம்.

பலாத்காரம் அல்லது பணபலம் இவற்றை மேற்கொள்ளாத எல்லா மதங்களும், அவற்றின் குருமார்கள், போதகர்கள், பிரசாரகர்கள் ஆகியோரது குணத்தைக் கொண்டுதான் வளர்ந்திருக்கின்றன. ஒரு மதத்தின் பிரதிநிதியிடத்தில் வெளிவேஷம் மட்டும் இருந்தால் போதாது. எந்தத் தத்துவத்தைச் சேர்ந்தவராயினும், அவருக்கு சுயநல எண்ணமே இருக்கக் கூடாது. வெறுப்பு ஏற்படக்கூடாது. நல்லொழுக்கம் இருக்க வேண்டும். நல்ல தபஸ் இருக்க வேண்டும். சாந்தமும் கருணையும் நிரம்பி இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களுடைய குணவிசேஷத்தினாலேயே அவர்களைத் தேடி வருகிறவர்களுடைய தோஷங்களும் போய்விட வேண்டும்.

இப்படிப்பட்டவர்களை உண்டுபண்ணுவதே இப்போது நம்முடைய மதத்தைக் காக்கவும், தழைக்கச் செய்யவும் முக்கியமான வழியாகும். எதிர்ப்பிரச்சாரம் எதுவுமே தேவை இல்லை. மதநெறிகளை உயிரோடு வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிற பிரதிநிதிகள்தான் வேண்டும். இப்படிப்பட்டவர்களால்தான் நம்முடைய மதம் யுகயுகாந்திரமாகக் காப்பாற்றப்பட்டு வந்திருக்கிறது. இனியும் இப்படிப்பட்டவர்களால்தான் அது உயிர் வாழ வேண்டும்.

Thursday, December 8, 2011

விபீஷணனின் கதை


விபீஷணன் ராவணனின் இளைய கோதரன். தன்னேரில்லாத அவன் பாரத கண்டத்தின் வரலாற்றுப் பக்கங்களில் அடிக்கடி சுட்டிக்காட்டப்படுபவன். இவன் ஒருவன் மட்டுமே பிரம்மாவிடமிருந்து என்றும் நிலைத்திருக்கும் தன்மையை (மரணமில்லா வாழ்வு) வரமாக பெற்றவன். தர்மத்திற்காக வாழும் அவன் ஒரு சிரஞ்ஜீவி. எங்கெல்லாம் நேர்மை இருக்கிறதோ அங்கெல்லாம் விபீஷணன் இருப்பான். அவனை வர்ணிக்க வார்த்தைகள் பற்றாது. இருந்தும் அபகீர்த்தியுடைய சகோதர சகோதரிகளான ராவணனை, கும்பகர்ணனை மற்றும் சூர்ப்பனகையை இந்த உலகம் அறிந்த அளவிற்கு விபீஷணனைப் பற்றி அறிந்திருக்கவில்லை.

ஸ்ரீமத் பாகவதத்தில் குறிப்பிடப்படும் தலைச் சிறந்த பக்தர்கள் வரிசையில் வீபிஷணன் இடம் கொண்டுள்ளான்.

பிரஹ்லாதன், நாரதர், பராசரர், புண்டரீகர், வியாசர், அம்பரீசன், சுகர், சௌனகர், பீஷ்மர், தல்ப்யன், ருக்மாங்கதன், உத்தவர், விபீஷணன் மற்றும் பல்குணாதின் என்னும் இவர்களே அந்த பாகவத வரிசையில் உள்ளவர்கள்.

எது விபீஷணனை இந்த அளவிற்கு தலைச் சிறந்தவனாக உண்டாகியது என்று ஒருவர் வியக்கலாம். இதற்கு அவனுடைய பிறப்பையும் அதன் பின்னணியையும் கண்டிப்பாகப் புரிந்து கொள்ள வேண்டும். பிறப்பால் அவன் பாதி அசுரன் பாதி பிராமணன். சேற்றில் பிறந்த செந்தாமரை போல் அவன் விளங்கினான். ராமனையும் தர்மத்தையும் இவன் நேசித்த அளவிற்கு நிகராக நேசித்த கடவுளர் யாருமில்லை.

சிறந்த ஞானியான விஸ்ரவஸுக்கும் அசுர குல நங்கையான கைகேசிக்கும் பிள்ளைகளாக பிறந்தவர்கள்தான் ராவணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை மற்றும் விபீஷணன். விஸ்ரவஸ், பிரம்மனின் பிள்ளையான புலஸ்தியரின் புதல்வனாவார். ஆகையால், பிரம்மாவின் ஞானமும் நற்குணமும் தன் தந்தையிடம் இருந்து மரபின் வழியில் விபிஷணன் பெற்றான்.

அசுரகுலத்தின் அரசாட்சியை மீண்டும் நிலைநாட்டவும் ஸ்ரீமன் நாராயணனை பழிவாங்கவும் துடித்துக் கொண்டிருந்த சுமாலியின் மகள்தான், விபீஷணனின் தாய் கைகேசி.

சுமாலியின் திட்டப்படி தீயவர்களாய் ராவணனும் கும்பகர்ணனும் விஸ்ரவஸ் மூலம் கைகேசிக்குப் பிறந்தார்கள். நல்மகன் ஒருவனை வேண்டிய கைகேசிக்குப் பிறந்தவன்தான் அவளுக்கும் உலகத்திற்கும் மகிழ்ச்சியை கொண்டு வந்த விபீஷணன்.

தீய சகோதர சகோதரிகளிடைய வளர்ந்தாலும் விபீஷணன் ஒரே குறிக்கோள் நேர்மை ஒன்றே. விபிஷணனின் சிறப்பை புரிந்து கொள்ள நாம் அவனுடைய மூத்த சகோதரர்கள் செய்த தீங்குகளை கண்டறிய வேண்டும். ராவணனும் கும்பகர்ணனும் வளர வளர அச்சமும் பூமியில் வளர்ந்தது. விபீஷணன் வளரும் பொழுதில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் சுற்றிலும் மலர்ந்தது.

எப்போதும் பசியோடு இருக்கும் கும்பகர்ணன் தன் வழியில் கண்ட மரங்களை, மிருகங்களை, மனிதர்களை மேலும் ஞானிகளையும் துறவிகளையும் கூட உண்டான். ராவணனோ தான் செல்லுமிடங்களில் எல்லாம் பயங்கரத்தையும் வன்முறையையும் பரவச் செய்தான். இறப்பிற்கும் அழிவிற்கும் காரணமானான்.

ஒரு நாள், விஸ்ரவஸ்ஸின் மூத்த மகனும் செல்வத்திற்கு அதிபதியுமான குபேரன் தன் தந்தையின் ஆஸ்ரமத்திற்கு வருகைப் புரிந்தான். அவனுடைய செல்வமும் மகிமையும் ராவணனுக்கு பொறாமையை உண்டாக்கியது. தானும் தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனைப் போல் விளங்க வேண்டும் என்று விரும்பினான். சக்தியும் மகிமையும் பெற தவம் ஒன்றே வழி என்று தன் பிள்ளைகளுக்கு உரைத்தார் விஸ்ரவஸ்.

விஸ்ரவஸ்ஸின் பிள்ளைகள் மூவரும் கடுந்தவம் இயற்றத் தொடங்கினர். அது பல்லாயிரம் வருடங்களாக நீண்டது. ராவணனுடைய குறிக்கோள் மூவுலகையும் ஆள்வதற்கு வேண்டிய அளவிலா சக்தியைப் பெறுவதே. கும்பகர்ணனுக்கு குறிப்பிட்டு கேட்கும்படியான குறிக்கோள் ஏதும் இல்லை. பல்லாயிரம் வருடங்களாக மேற்கொண்ட கடுந்தவத்திற்குப் பிறகு, வரம் பெற வேண்டி ராவணன் தன் தலைகள் ஒவ்வொன்றாய் கொய்து கொண்டே வந்தான். தன்னுடைய பத்தாவது தலையைக் கொய்யும் வேளையில் அவன் முன் பிரம்மா தோன்றினார். தனக்கு மரணமில்லா வாழ்வை வரமாக அளிக்கும்படி ராவணன் பிரம்மாவிடம் கேட்டான். பிரம்மா மறுத்தார். கும்பகர்ணன் கூட தொடர்ந்து பல்லாயிரம் ஆண்டுகளாய் கடுந்தவம் செய்து நல்லுறக்கத்தை வரமாகப் பெற்றான்.

விபீஷணன் ஒற்றைக் காலில் நின்றபடி ஐயாயிரம் வருடங்கள் கடுந்தவம் செய்தான். தர்மத்தின் அடிப்படை உண்மை ஒன்றே என்று குறிப்பிடுவதுப் போல இருந்தது அவனுடைய ஒற்றைக்கால் தவம். அவனுடைய தவம் கடவுளர்களை திருவுளங்கொள்ள வைத்து அவன் மேல் பூமாரி பொழியச் செய்தது. பிரம்மன் அவனுக்கு மரணமிலா பெருவாழ்வை வரமாக வழங்கினார். ஏனெனில் கடவுளர்களுக்குத் தெரியும் விபீஷணன் வாழும் வரை தர்மம் அழிந்து போகாது என்று. விபீஷணன் ராவணனின் ஒவ்வொரு கொடிய செய்கையையும் எதிர்த்தான்.

உண்மைக்கும் நீதிக்குமான வழி அத்தனை எளிதானது அல்ல. அதுவே சகோதரர்களை, குடும்பத்தை மற்றும் அரசாட்சியை விட்டு விபிஷணனை விலகும்படி செய்து இராமனிடம் தஞ்சத்தைக் கோரியது.


- - ஸ்ரீமத் ஜகத்குரு சங்கராச்சார்ய ஸ்ரீ ஸ்ரீ ராகவேஸ்வர பாரதி மஹாசாமிஜி, ஸ்ரீ ராமசந்த்ரபுர மடம். (City Express 7.11.2011 ஆங்கில வெளியீட்டின் தமிழாக்கம்)

Wednesday, September 7, 2011

அன்பே வெற்றி

ஒருவர் தோல்வியில் இன்னொருவர் வெற்றி என்பது உண்மையான வெற்றியா?
அப்படியாயின் தோல்வியின் வெற்றியைத்தான் வென்றவர் ருசிக்கிறார்.
வெற்றியின் வெற்றியை அல்ல.

வலிமையால் சிறுமையை வீழ்த்துவதா வெற்றி!

இருபுறம் சமவலிமையோடு நின்று போர் புரிந்து
ஒருவர் வீழ்ந்து மற்றொருவர் பெறுவதுமா வெற்றி

எனக்கு கொடுத்த வலியை அதுபோலவோ அல்லது
அதனினும் அதிகமாகவோ உனக்கு கொடுப்பது வெற்றியா?

உன் தீச்செயல் தந்த பாதிப்பை அத்தீச்செயலயே உனக்கு
திரும்பச் செய்து பாதிப்பை ஏற்படுத்த எண்ணும் எண்ணம்
மந்தைக் கூட்டச் சிந்தனை அல்லவா

ஒன்றையே இன்னொன்றும் பிரதிபலித்தால்
தனித்தன்மை எனும் இய்ற்கையை இழத்தலாகாதா!
படைப்பின் சிறப்பை இழப்பதாகாதா!

வீழ்ச்சியின் மறுபயனா வெற்றி

இலக்கைக் கொண்டு அடைவதல்ல வெற்றி
இலக்காய் இருப்பதே வெற்றி

தேடியோ போராடியோ வீழ்த்தியோ பெறுவதல்ல வெற்றி.
அது எப்போதும் இங்கேயே இருக்கிறது யாரும் விளைவிக்காமல்;
எல்லாவற்றையும் தன்னுள் ஒன்றாய் ஒருங்கிணைத்துக் கொண்டு.
தனி வழியாய் இல்லாமல், யாரும் பயணம் செய்ய பொது வழியாய்.

அதன் இன்னொரு பெயர்
“அன்பு”.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

இது குறள் தரும் வெற்றியின் இலக்கணம்
வெற்றியின் வெற்றி.

-சக்திப்ரியன்

Friday, August 5, 2011

ஓரே ஒரு முறையேனும்

கண்ணும் கண்ணும்
கருத்தும் கருத்தும்
கலந்து உண்டாகி
விழுந்த விதை
அது
ஆசை பூமியின் முகட்டை பிளந்து
உள்ள வெளியில்
தளிராய் துளிர்த்து
செடியாய் வளர்ந்து
உறுதி கொண்டு
கிளைகள் விரித்து
பருவம் எய்தி அடர்த்தியாய்
பச்சை மேலாடை போர்த்தி
மேலும் உறுதியாய்
மரமாய் வளர்ந்து நிற்குதடீ!

இயற்கை சீற்றத்தினாலோ
பருவ மாற்றத்தினாலோ
வேர் தளர்ந்து வீழ்வதன் முன்னம்
நீ
ஒரே ஒரு முறையேனும்
அதன் நிழலில் வந்து
இளைப்பாறிவிட்டுச் செல்லேன்.

-சக்திப்ரியன்

Wednesday, July 20, 2011

குதிரை - பெண்

கண்கட்டி பயணிப்பவை என
கட்டவிழ்த்து விடப்பட்டவை என

கண்கட்டாமலே கண்கட்டியதாய்
பாவித்துப் பயணிப்பவை என

கட்டவிழ்த்து விடப்படாமலே
கட்டவிழ்த்துவிட்டதாய் என

கட்டவிழ்த்து விட்டாலும்
கண்கட்டி விட்டாலும்
குதிரையின் இயல்பு
ஓடுவது


Wednesday, July 13, 2011

விழிப்பு

நிஜமான கனவு
கலைந்தது
கண் விழிப்பில்

கனவானது நிஜம்
ஞான விழிப்பில்

Sunday, May 1, 2011

வாழ்வின் நிதர்சனம்

வேண்டாம் என்றாலும்

வந்தழைக்கும் விருந்தாளி

உடற்பயனின் எல்லை

உறவு அறுத்து வரும் உறவு

இன்னுமொரு பயணத்தின் விசா

மாயை அவிழ்க்கும் சாவி

உனக்கும் எனக்கும் தனித்தனியாய் வரும் சுனாமி

மரணம்

Saturday, February 12, 2011

கவிதை (அ) கருத்தாக்கம்-2

தெரிந்து கொள்வதல்ல
தெரிந்ததை விடுவதே
ஞானம்

நான் செய்யும் பிரார்த்தனை - எனக்கு
நன்றாக கேட்கிறது
எனக்கு கேட்பதால்
என் இறைவா
உனக்கும் கேட்குமல்லவா!

Wednesday, January 26, 2011

கவிதை (அ) கருத்தாக்கம்

கடலில் விழுந்தது மழைத்துளி

கடலானது மழைத்துளி


இக்கரை அக்கரை

இன்பம் துன்பம்

இருள் வெளிச்சம்

நன்று தீது

பாபம் புண்ணியம்

நடுவினில் சலனமில்லாமல் ஓடும்

நதி

நிலையாமை


பருவங்கள் மாறும்

உருவங்கள் மாறும்

உள்ளம் மாறும்

கள்ளம் மாறும்

மாறாதது மாறும்

மாறியதும் மாறும்

செய்யப்பட்டது மாறும்

செய்யப்படாதது மாறாது – ஆகாயம்

செயல் மாறும்

செய்விப்பவன் மாறான்

மாற்றத்தையே ஆட்டமாக

செய்பவன் நடராஜன்

என்றும் மாறாதவன் நடராஜன்


வெட்டவெளியில் தோன்றும் கானல்

வெங்காயம்

அச்சத்தை ஆணிவேராய் கொண்ட விருட்சம்

இடம் மாறாமலே

நிறம் மாறும் பச்சோந்தி

தெரிந்ததை விடாது

தெரிவதில் நிலைக்காது

இல்லை ஆதாரம் – கட்டும்

கோட்டை ஏராளம்

விலகவும் வேண்டாம்

பழகவும் வேண்டாம்

விழிப்புணர்வாய்

வேடிக்கை பார்த்தால் போதும்

விளையாட்டு ஓயும்


மர்மம்

மறையாமல் பின் தொடரும்

கர்மம்

கழியாமல் பெருகும் கணக்கு

எப்போதும் இதனோடு பிணக்கு

பிணைந்திருக்கும் உடலால்

பிரிந்திருக்கும் மனதால்

வெறுப்பை நீராய் ஊற்றி

வளர்த்த விஷ விருட்சம்

விடைதெரியாத கேள்வி

வினா தேடும் கேள்வி

பாறையில் செதுக்கப்பட்ட ரோஜா

செயலுக்கு காத்திருக்கும் பலன்

பாவத்தில் ஒருகால்

புண்ணியத்தில் ஒருகால்

ஆனாலும் ஊனம்

ஊருக்கு ஒரு பேச்சு

உள்ளுக்குள் ஒரு பேச்சு

யாருக்கு இந்த வாழ்க்கை

எல்லாம் நச்சாய் போச்சு

உள்ளே போடும் வண்ணம்

உலகில் தோன்றும் வண்ணம்

பச்சைக்கு பச்சை

சிவப்புக்கு சிவப்பு

போராட்டம் நிற்க நடத்தும்

போராட்டம்

பிறர் இழுப்புக்குச் செல்லும்

தேரோட்டம்

நிலைக்கு வந்து நிற்குமா

தேர்?

கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்

நான் யார்?


நேற்றைக்கு அவன்

இன்றைக்கு இவன்

நாளைக்கு எவன்?

எனினும் எப்போதும்

எல்லோர்க்கும் இறுதியில்

எமன்!


வாழ்க்கை

வட்டமோ முக்கோணமோ

சதுரமோ நீள்சதுரமோ

எவையானாலும் என்ன

துவங்கிய இடத்தில்

முடியும் போதே

எல்லாம் முழுமையாகிறது.


உன்னைப் பாராமலிருக்க

உன்னோடு பேசாமலிருக்க

மைல்கள் பல கடந்து வந்துவிட்டேன்.

பிரியாமல் என்னோடு எனக்குள்

உறவாடி பயணித்து வந்த உன்னை

எங்கே எப்படித் தொலைப்பேன்?

ஆற்றுப் பெருவெள்ளம் கடக்க

பஞ்சு முட்டைகளால்

பாலம் அமைக்க

முயன்றது போலனது

என் காதலை

நான் கடக்க முயற்சிப்பது.


ஐம்புலன் உணர்விற்கு

அடங்காதிருத்தலே

சுதந்திரம்.


தனிமை வேண்டுமா

கூட்டம் வேண்டுமா

குரு வேண்டுமா

அருள் வேண்டுமா

எது வேண்டும்

தன்னைத்தான் அறிய

அறிய

’தான்’ மட்டும் போதாதோ


மகிழ்ச்சியினால் இணைந்தோம்

மகிழ்விற்க்காக பிரிந்தோம்

மகிழ்பவனும் மகிழ்ச்சியும்

வெவ்வேறாய் போக

மகிழ்தல் அனாதயாய்



-ஸ்ரீசக்திப்ரியன்