Wednesday, January 26, 2011

கவிதை (அ) கருத்தாக்கம்

கடலில் விழுந்தது மழைத்துளி

கடலானது மழைத்துளி


இக்கரை அக்கரை

இன்பம் துன்பம்

இருள் வெளிச்சம்

நன்று தீது

பாபம் புண்ணியம்

நடுவினில் சலனமில்லாமல் ஓடும்

நதி

நிலையாமை


பருவங்கள் மாறும்

உருவங்கள் மாறும்

உள்ளம் மாறும்

கள்ளம் மாறும்

மாறாதது மாறும்

மாறியதும் மாறும்

செய்யப்பட்டது மாறும்

செய்யப்படாதது மாறாது – ஆகாயம்

செயல் மாறும்

செய்விப்பவன் மாறான்

மாற்றத்தையே ஆட்டமாக

செய்பவன் நடராஜன்

என்றும் மாறாதவன் நடராஜன்


வெட்டவெளியில் தோன்றும் கானல்

வெங்காயம்

அச்சத்தை ஆணிவேராய் கொண்ட விருட்சம்

இடம் மாறாமலே

நிறம் மாறும் பச்சோந்தி

தெரிந்ததை விடாது

தெரிவதில் நிலைக்காது

இல்லை ஆதாரம் – கட்டும்

கோட்டை ஏராளம்

விலகவும் வேண்டாம்

பழகவும் வேண்டாம்

விழிப்புணர்வாய்

வேடிக்கை பார்த்தால் போதும்

விளையாட்டு ஓயும்


மர்மம்

மறையாமல் பின் தொடரும்

கர்மம்

கழியாமல் பெருகும் கணக்கு

எப்போதும் இதனோடு பிணக்கு

பிணைந்திருக்கும் உடலால்

பிரிந்திருக்கும் மனதால்

வெறுப்பை நீராய் ஊற்றி

வளர்த்த விஷ விருட்சம்

விடைதெரியாத கேள்வி

வினா தேடும் கேள்வி

பாறையில் செதுக்கப்பட்ட ரோஜா

செயலுக்கு காத்திருக்கும் பலன்

பாவத்தில் ஒருகால்

புண்ணியத்தில் ஒருகால்

ஆனாலும் ஊனம்

ஊருக்கு ஒரு பேச்சு

உள்ளுக்குள் ஒரு பேச்சு

யாருக்கு இந்த வாழ்க்கை

எல்லாம் நச்சாய் போச்சு

உள்ளே போடும் வண்ணம்

உலகில் தோன்றும் வண்ணம்

பச்சைக்கு பச்சை

சிவப்புக்கு சிவப்பு

போராட்டம் நிற்க நடத்தும்

போராட்டம்

பிறர் இழுப்புக்குச் செல்லும்

தேரோட்டம்

நிலைக்கு வந்து நிற்குமா

தேர்?

கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்

நான் யார்?


நேற்றைக்கு அவன்

இன்றைக்கு இவன்

நாளைக்கு எவன்?

எனினும் எப்போதும்

எல்லோர்க்கும் இறுதியில்

எமன்!


வாழ்க்கை

வட்டமோ முக்கோணமோ

சதுரமோ நீள்சதுரமோ

எவையானாலும் என்ன

துவங்கிய இடத்தில்

முடியும் போதே

எல்லாம் முழுமையாகிறது.


உன்னைப் பாராமலிருக்க

உன்னோடு பேசாமலிருக்க

மைல்கள் பல கடந்து வந்துவிட்டேன்.

பிரியாமல் என்னோடு எனக்குள்

உறவாடி பயணித்து வந்த உன்னை

எங்கே எப்படித் தொலைப்பேன்?

ஆற்றுப் பெருவெள்ளம் கடக்க

பஞ்சு முட்டைகளால்

பாலம் அமைக்க

முயன்றது போலனது

என் காதலை

நான் கடக்க முயற்சிப்பது.


ஐம்புலன் உணர்விற்கு

அடங்காதிருத்தலே

சுதந்திரம்.


தனிமை வேண்டுமா

கூட்டம் வேண்டுமா

குரு வேண்டுமா

அருள் வேண்டுமா

எது வேண்டும்

தன்னைத்தான் அறிய

அறிய

’தான்’ மட்டும் போதாதோ


மகிழ்ச்சியினால் இணைந்தோம்

மகிழ்விற்க்காக பிரிந்தோம்

மகிழ்பவனும் மகிழ்ச்சியும்

வெவ்வேறாய் போக

மகிழ்தல் அனாதயாய்



-ஸ்ரீசக்திப்ரியன்


No comments:

Post a Comment