Wednesday, January 5, 2011

இடும்பைக்கு இடும்பை படாஅதவர்

நீங்கள் எந்தக் கோவிலுக்கும் சென்று இறைவனை வணங்க வேண்டாம், எந்த கடினமான தத்துவத்தையும் கற்க வேண்டாம், வாழ்வை உணர்வதற்காக எந்த விதமான கடுமையான முயற்சிகளிலும் ஈடுபட வேண்டாம். ஏதாவது மூன்றே மூன்று திருக்குறளைத் தேர்ந்தெடுத்து அதை வாழ்வின் எல்லாப் பொழுதும் கடைபிடித்தாலேயே போதும். வாழ்வின் ரகசியம் விளங்கிவிடும் என்று எனது நண்பர் திரு. மோகன் ரங்கன் அவர்கள் கூறுவார்.

சமீபத்தில் அவரிடம் உரையாடிக் கொண்டிருந்த போது இடுக்கண் அழியாமையில் இருந்து 628-வது குறளின் சிறப்பை எனக்கு தெரிவித்தார். இப்படி யாராவது நமக்கு உரைத்துவிட்டால் அதன்மேல் ஆர்வம் வந்துவிடுமே. உடனே திருக்குறள் புத்தகத்தை தேடி அந்த அதிகாரம் முழுவதையும் படித்தேன்.

அதில் கீழ்க்காணும் குறள்கள் வருகின்றது.

628. இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

துன்பம் உறுதல் இலன்.

629. இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்

துன்பம் உறுதல் இலன்.

இரண்டு குறள்களும் மேலோட்டமாக காண்கையில் ஒரே பொருளைத் தருவதாக உள்ளது. ஒரே கருத்தை வலியுறுத்துவதற்காக திருவள்ளுவர் இரண்டு குறள்களை வழங்கியிருக்கமாட்டார் என்பது என் எண்ணம்.

மேற்கூறிய எனது நண்பரிடம் இதுப்பற்றி வினவினேன். அவர் அளித்த பொருளை நான் புரிந்துக் கொண்ட அளவில் இதற்கு விளக்கம் அளிக்க முயற்சிக்கிறேன். குற்றம் இருப்பின் திருத்தவும்.

முதல் குறள் சொல்லுவது, துன்பத்தினால் வருந்துதல் இல்லாத ஒருவன் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்றால் அவன் இன்பம் என்று நினைத்து எதையும் தேடமாட்டான்., ஏற்றமும் சரிவும் ஒரே மலையில் இருப்பது போல் இடர் வருகையில் வாழ்வின் இயல்பாக அதையும் ஏற்றுக் கொள்வான்.

இரண்டாம் குறள் சொல்லுவது, தான் தேடாமலே வருகின்ற இன்பத்துள்ளும் இன்பத்தை அனுபவிக்க விரும்பாதவன், தானாக தேடாது வருகின்ற துன்பத்துள்ளும் துன்பத்தை உணரமாட்டான்.

முதல் குறள் இன்பம் தேடுதல் இலாது இருப்பதையும் அடுத்த குறள் தேடாது வருகின்ற இன்பத்தை நுகராது இருப்பதையும் வலியுறுத்துகிறது. ஏனெனில் இன்பத்தின் மறுபக்கமாக துன்பமும், துன்பத்தின் மறுபக்கமாக இன்பமும் இருப்பதை அதை வாழ்வின் இயல்பாகக் கற்றுணர்ந்தவர்கள் கருதுகிறார்கள்.

இத்தகையவர்கள்தான் துன்பத்திற்கே துன்பத்தை அளிப்பவர்களாக இருக்கிறார்கள். இதோ அந்தக் குறள்:

623. இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படாஅ தவர்.

-ஸ்ரீசக்திப்ரியன்

No comments:

Post a Comment