Sunday, January 31, 2010

யாதும் ஊரே! யாவரும் கேளிர்!

நம் முன்னோர்களின் சிந்தனை எப்போதுமே விசாலமானதுதான். அவர்கள் உலகளாவிய அல்லது பிரபஞ்சப் பார்வையுடனேயே திகழ்ந்து இருந்தார்கள். ஒட்டு மொத்த உயிர்குலத்தையும் ஒரே இனமாகப் பார்த்தார்கள். அவர்களின் பிரார்த்தனைகள், எல்லோரும் சமம்; எல்லார்க்கும் எல்லாம் என்பதாகவே இருந்துள்ளது.


உலகில் இன்று நாம் தேசத்தால், மொழியால், சாதியால், நிறத்தால் நம்மை பேதப்படுத்திக் கொண்டுள்ளோம். ஆனால், நம் முன்னோர்கள் உலகத்தை, எல்லா உயிர்களும் ஒருங்கிணைந்த ‘வசுதேவகுடும்பமாகத்தான் கண்டார்கள்.


தமிழில் கணியன் பூங்குன்றனரால் எழுதப்பட்ட புறநானூற்று பாடல் ஒன்று இதற்கு சாட்சியாக உள்ளது.


இப்பாடலின் முதல் இரண்டு வரிகள் நம்மிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக எழுதிய கவிதையில் கூட அந்த இரண்டு வரிகள் இடம்பெற்று உள்ளது.


யாதும் ஊரே; யாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர் தர வாரா;


இவ்விரண்டு வரிகளுக்கு பின்னால் வாழ்வை பற்றிய தன் நோக்கை பதினோறு வரிகளில் பாடியுள்ளார் கணியனார்.


எல்லா ஊரையும் தமது ஊராகவும், எல்லோரையும் தம் உறவினராகவும் காணுமிவர், கெட்டதும் நல்லதும் நாம் அனுமதிக்காமல் நம்மிடம் வாராது என்கிறார். அதுப்போலவே வருத்தமும் பின் அவ்வருத்தத்தை தணித்துக் கொள்ளுதலும் நாமாக நமக்கு செய்துகொள்ளலே என்றுரைக்கிறார்.


மேலும்,

மரணமெனும் நிகழ்வு இந்த பூமிக்கு புதியதன்று.

ஆகையால் வாழ்பவனாகிய நான் இதைக் கருத்தில் கொண்டு வாழ்க்கை இனிமையானது என்று அதிகம் மகிழ்ந்தது இல்லை.

விரும்பியது கிடைக்காவிட்டாலும் வாழ்வின் மீது எமக்கு கோபத்தினால் உண்டாகும் வெறுப்பும் இல்லை.


மின்னல் தெறித்து மழையாகக் கொட்டிடும் நீர்த்துளிகள் ஒன்றாக திரண்டு கற்களில் உருண்டிடும் ஆற்றுவெள்ளம் போல் வாழ்க்கை அதன் போக்கில்தான் செல்லும் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டோம்.


அதனால் பெரியவர்களைக் கண்டு வியந்து போதல் இல்லை. அதைவிட, முக்கியமாக சிறியவர்களை இகழ்ச்சி செய்தல் இல்லை என்கிறார்.


முதல் இரண்டு வரிகளை மட்டும் அதிகமாக பேச்சளவில் பயன்படுத்தும் நாம், அதன்பின் வரும் வாழ்வியல் தத்துவத்தை ஏன் பிரபலமாக்கவில்லை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துவதற்கு கடினமாகக் கருதித் தவிர்த்துவிட்டோமோ?


முழுப்பாடல் இதோ இங்கே:


யாதும் ஊரே; யாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர் தர வாரா;

நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;

சாதலும் புதவது அன்றே; வாழ்தல்

இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,

இன்னாது என்றலும் இலமே; ‘மின்னொடு

வானம் தண் துளி தலைஇ, ஆனாது

கல் பொருது இரங்கும் மல்ல்ல் பேர் யாற்று

நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர்

முறை வழிப்படூஉம்என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம்ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.


- கணியன் பூங்குன்றனார், பொதுவியல் திணை, பொருண்மொழிக் காஞ்சி துறை, புறநானூறு


-ஸ்ரீசக்திப்ரியன்

Thursday, January 28, 2010

சொன்னது கண்ணன்

கர்மண்யேவாதி4காரஸ்தே மா பலே2ஷு கதா3சன |

மா கர்மப2லஹேதுர்ப்பூ4ர் மா தே ஸங்கோ3ஸ்த்-வகர்மணி ||

-47, ஸாங்க்ய யோகம், பகவத்கீதை


செயலிலேயே உனக்கு அதிகாரம்; ஒருபோதும் பயனில் இல்லை; பயனைக் கருதிச் செயல் செய்பவனாக இராதே. செயலின்மையில் உனக்குப் பற்றும் ஏற்பட வேண்டாம்.


பகவத்கீதையில் மிக முக்கியமான ஸ்லோகம் இது. இதற்கு பல ஆன்றோர்களும் சான்றோர்களும் பல அற்புதமான விளக்கவுரை அளித்துள்ளார்கள்.


இந்த ஸ்லோகத்திற்கு எளியேன் கற்றதை, உணர்ந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


கடமையை செய்! பலனை எதிர்பாரதே! என்று ஸ்ரீ கண்ணபிரான் சொன்னதாக பல பேர் உரைக்கிறார்கள். உண்மையில் கண்ணன் அப்படிச் சொன்னதாகத் தெரியவில்லை.

ஒருவனுக்கு எது சுதர்மமோ அதை அவன் செய்தேயாக வேண்டும். எல்லாச் செயலுக்கும் எதிர்வினை (பலன்) உண்டு.


செயலை செய்யதான் உனக்கு அதிகாரம். ஆனால் அதனால் உண்டாகும் பலன்மேல் அதிகாரம் செலுத்த உனக்கு உரிமையில்லை என்றுதான் கோவிந்தன் சொல்லுகிறான்.


ஒரு செயலுக்கு இரண்டு விளைவுகள் உண்டாகாது. அப்படி உண்டாகுமானால் அதை செய்வது நம் மனமே!


செயலை செய்யும் போதே அதன் பலன் இப்படி இருக்க வேண்டும் என்று நாம் (அதாவது நம் மனம்; நாமும் நம் மனமும் வெவ்வேறல்ல) முடிவு செய்து விடுகிறோம். எதிர்ப்பார்க்கிறோம்.

முடிவு எதிர்ப்பார்த்ததுப் போல் இல்லையெனில் வருகின்ற பலனை இரண்டாவதாகப் பார்க்கிறோம்.

சரி! பலனை எதிர்ப்பார்த்தே ஒரு செயலை செய்கிறோம். அதன் பலனும் விரும்பியதைப் போல அமைந்துவிடுகிறது. பின் என்ன செய்வோம்?


அந்தப் பலன்மேல் அதிகாரம் செலுத்த ஆரம்பிப்போம். சந்தோஷம் கொடுத்த அந்தப் பலனை தக்க வைத்துக்கொள்ள போராடுவோம்.


ஒருவேளை பலன் விரும்பாதது போல் நடந்துவிட்டால் கவலை அடைகிறோம். அப்போதும் கவலை அளிக்கும் அந்த பலன்மேல் அதிகாரம் செலுத்த முயற்சிக்கிறோம்.

அத்துன்பத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அதை நம் வாழ்விலிருந்து விரட்டியடிக்கப் பார்க்கிறோம்.


இப்படி ஏற்படக்கூடிய பலனுக்காக போராடிப் போராடி நிகழ்கால வாழ்வை தொலைக்கிறோம்.

நிகழ்காலத்தில் வாழ்வதன் மகத்துவத்தையே கிருஷ்ணன் இங்கே வலியுறுத்துகிறான்.


செயலின் மேல் இருக்கும் கவனம் பயனின் மேல் திரும்பினால் செயலில் நமது முழுத் திறமையும் வெளிப்படாமல் போய்விடும். முழுத் திறமையும் வெளிப்படாத எந்தச் செயலும் குறையுடையதாகவே இருக்கும். குறையுடைய செயலை செய்துவிட்டு பலன் நான் எதிர்ப்பார்ப்பதுப் போல்தான் இருக்க வேண்டும் என்று அதிகாரம் செய்வது எப்படி பொருந்தும்.

வினோபாபாவின் கூற்றின்படி ஒரு செயலுக்கு இரண்டு விதமான பயன்கள் உண்டு. ஒன்று அகப்பயன்; மற்றொன்று புறப்பயன்

செயலை நிறைவாகச் செய்யும் போது அதனால் ஏற்படுகின்ற சுயதிருப்தி (SELF SATISFACTION). வேறு யாரும் இதை நமக்குத் தரமுடியாது.

புறப்பயன் எப்போதுமே அழியக்கூடிய உடலோடு சம்பந்தப்பட்டது. புறப்பயனைக் கொண்டு அதிகபட்சம் நம்முடைய உடல்ரீதியான அடிப்படைத் தேவைகளைத்தான் (உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றிற்காகவோ அல்லது அதன் தொடர்பான கேளிக்கைகளுக்காகவோ). பூர்த்தி செய்துகொள்ள முடியும்.

ஒரு உதாரணம் பார்ப்போம்.

உங்கள் தலைமை அதிகாரி உங்களிடம் திடீரென்று ஒரு பணியைக் கொடுத்து இன்னும் இரண்டு மணிநேரத்திற்குள் முடித்துத் தருமாறுக் கேட்கிறார்.

அந்தப் பணியை விழிப்புடன், உங்கள் முழுத்திறனையும் வெளிப்படுத்தி ஒன்றரை மணிநேரத்திலேயே முடித்துக் கொடுத்துவிடுகிறீர்கள். உங்களுக்கு முழுமையான சுயதிருப்தி. இது அகப்பயன்.

மறுநாள் தலைமை அதிகாரி உங்களை அழைத்து ஒரு தொகையைக் கொடுத்துப் பாராட்டுகிறார். இது புறப்பயன். இந்தப் புறப்பயனைக் கொண்டு மேலே சொன்னது போல் அழியக்கூடிய உடலுக்கான தேவைகளைத்தான் செய்துகொள்ள இயலும். உடலைப் போலவே புறப்பயனும் அழியக்கூடியதே.

அன்பு (LOVE) எப்போது தெய்வீகமாக மாறுகிறது? அதை எந்தவிதமான பற்றுதலுமின்றி (UNCONDITION) வெளிப்படுத்தும் போதுதான். பலன்மேல் அதிகாரம் (பற்று) இன்றி கர்மா (செயல்) செய்யப்படும் போது அது தெய்வீகமாக மாறுகிறது.

நமது சுதர்மாவின்படி பலனின் மேல் கவனத்தை செலுத்தாது நாம் செய்யும் கர்மா நமக்கு சுயதிருப்தியை அளிக்கிறது. சுயதிருப்தி பெறும்போது நமது மனம் சமநிலையில் இருக்கிறது. அதனால் மனத்தின் ஆற்றல் சேமிக்கப்படுகிறது. விழிப்புணர்வு பெருகுகிறது. ஆக இதுவே யோகம் ஆகிறது. கர்மயோகம் ஆகிறது.

ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்

-ஸ்ரீசக்திப்ரியன்

Sunday, January 24, 2010

சிவனின் மாணிக்கம்


மாறுபாடில்லாத முற்றிய பக்தியில் திளைப்பவன் தான் காண்பதெல்லாம், கேட்பதெல்லாம், உணர்வதெல்லாம் தான் வணங்கும் கடவுளாகவே பாவிக்கிறான்.


அத்தகைய பாவனையில் மாணிக்கவாசகப் பெருமான் திருப்பள்ளியெழுச்சியில் இரண்டாவதாக ஒரு பாடலை பாடியுள்ளார். பாடல் கடைசியில்.


காலையில் சூரியன் கீழ்த்திசையில் உதிப்பான். இருள்விலகும். புள்ளினங்கள் எல்லாம் விழித்து சந்தோஷமாய் கூவும். சூரியன் தன் இதமான வெப்பமென்னும் சாவி கொண்டு தாமரை மலர்களின் கதவுகளைத் திறப்பான். இதற்காக காத்திருக்கும் வண்டினங்கள் தாமரை மலர்களை பறந்து வந்து மொய்க்கும். இதுதான் நாம் சாதரணமாக காணும் காட்சி. மாணிக்கவாசகப் பெருமானுக்கு இது எப்படி காட்சியளிக்கின்றது என்று பாருங்கள்.


உலகத்துக்கு ஒளி அளிப்பதற்காக ஒரு சூரியன் எழுகிறானாம். அதுப்போல் தன் பக்தர்களுக்கு உள்ஒளி கிடைப்பதற்காக சிவனின் திருமுக மண்டலத்திலிருந்து ஒரு அருணன் (சூரியன்) தோன்றுகிறானாம். அந்த சூரியனின் பெயர் கருணையாம். கருணையெனும் சூரியன் உதித்தவுடன் தாமரை மலர்கள் மலர வேண்டுமல்லவா! இங்கேயும் ம்லர்கின்றது. சிவபெருமானின் நயனங்கள் என்ற தாமரை மலர்கள் மலர்கின்றது. மலர்ந்தவுடன் அதில் தேன் பருக பக்தர்கள் எனும் வண்டின் குழாம்(கூட்டம்) வந்து சூழ்ந்து மொய்க்கின்றதாம். ஆஹா! என்ன அருமை!


பக்தியில் திளைப்போர் நிச்சயம் இந்தப் பாடலிலும் திளைப்பார்கள்.


அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்

அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின்

கருணையின் சூரியன் எழஎழ நயனக்

கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்

திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே

அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே

அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே.


பொருள்: சூரியன் இந்திரனின் திசையாகிய கிழக்கு திசையை அடைந்தான். அதனால் இருள் விலகியது. அதுபோலவே சிவபெருமானே! உன்னுடைய திருமுக மண்டலத்திலிருந்து கருணையெனும் சூரியன் மேல் எழ எழ உன்னுடைய நயனம் எனும் தாமரை மலர்கின்றது திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபிரானே! அருளெனும் செல்வத்தை எங்களுக்கு தருவதற்காக வரும் ஆனந்த மலையே! தாமரையை மொய்க்க திரண்டு வரும் ஆறுகால்கள் உடைய வண்டுகள் போல் நாங்களும் உன் திருகண்களெனும் தாமரையை மொய்க்க கூட்டமாகவும் வரிசையாகவும் வருகிறோம்.   ஓயாது அருளெனும் அலைவீசும் கடலே! பள்ளி எழுந்தருள்வாயாக.

Saturday, January 23, 2010

யுகாந்தா (ஒரு யுகத்தின் முடிவு)

முனைவர் ஐராவதி கார்கே எனும் பெண் எழுத்தாளர் எழுதிய யுகாந்தா (மூலம்: மராத்திய மொழி) என்ற தமிழாக்க நூலை சமீபத்தில் படித்தேன். கவிஞரும், சிறுகதை ஆசிரியருமான திரு. அழகியசிங்கர் அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்.

மகாபாரதத்தின் சில கதாபாத்திரங்களை எடுத்துக்கொண்டு அதன்மூலம் மகாபாரதத்தின் எல்லா எல்லைகளையும் தொட்டிருக்கிறார். ஜெயாஎன்ற பெயரில்தான் முன்னதாக மகாபாரதம் இருந்ததாகவும் அதன்பின்னே பல இடைச்செருகல்கள் செய்யப்பட்டு மகாபாரதம் என்ற இதிகாசம் புனையப்பட்டதாகவும் கூறியுள்ளார். எங்கெங்கெல்லாம் இடைசெருகல்கள் செய்யப்பட்டிருக்கலாம் என்பதையும் கதாபாத்திரங்களை விவரிக்கும் போது அங்காங்கே விளக்கம் அளித்துள்ளார்.


கிருஷ்ணன் ராஜனிலிருந்து வாசுதேவனாக மாறியதையும் சொல்லியுள்ளார். கிருஷ்ணன் தன்னை வாசுதேவனாக அழைக்கப்படுவதையே விரும்பியுள்ளான் என்றும் தெரிவிக்கிறார்.குந்தி, மாத்ரி, காந்தாரி, திரௌபதி என்ற பெண்களைப் பற்றி வெளிப்படையாக மகாபாரதம் பேசியுள்ளது என்கிறார்.


பாண்டுவின் முதல் மனைவி என்ற அடிப்படையில் அவன் இறந்த போது குந்தி உடன்கட்டை ஏறாமல் மாத்ரியை (அவளே எடுத்த முடிவு ஆயினும்) உடன்கட்டை ஏறவிட்டது; காந்தாரத்திலிருந்து சகுனியோடு அஸ்தினாபுரம் வந்தபின்தான் காந்தாரிக்கு தனக்கு மணமுடிக்கப் போகும் மன்னன் திருதாஷ்ட்ரனுக்கு கண் குருடு என்பதை தோழிமூலம் அறிந்து மயங்கிவீழ்ந்தது; சபையின் நடுவே தன்னைக் கொண்டு வந்தபின் தன்னை தோற்றபின் தருமன் என்னை பந்தயம் வைத்தானா? தன்னை இழந்தபின் என்னை பந்தயம் வைக்க அவனுக்கு அருகதை உள்ளதா? என்று கேள்விகள் கேட்டு சபையில் இருந்த பெரியோர்கள் எல்லோரையும் திரௌபதி சங்கடத்தில் உள்ளாகியது; என்று பெண்களுக்கு அன்று இருந்த நிலையைப்பற்றி தெளிவாக விளக்கமளித்துள்ளார்.


விதுரனை எமனின் அம்சமாக கூறியுள்ளார். விதுரன் சூதப்பெண்மணிக்கு பிறந்ததால் அரசவையில் இரண்டாம் கட்ட நிலையிலேயே அவன் வைக்கப்பட்டு இருந்ததை அவன் எந்த விகற்பமும் இல்லாமல் ஏற்றுக்கொண்டு எப்பொழுதும் சமநிலையில் இருந்துள்ளாதாக தெரிவிக்கிறார். இருப்பினும் பாண்டவர்களுக்கு கௌரவர்களால் ஆபத்து ஏற்படும் என்று நினைத்தபோதெல்லாம் அதை தடுக்க முயற்சித்துள்ளதாகவும் சொல்கிறார்.


விதுரனுக்கும் குந்திக்குமாக பிறந்தவனே தருமன் என்று ஒரு புதிய கோணத்தை காட்டுகிறார். விதுரன் இறக்கும் தருவாயில் தருமனுக்கும் அவனுக்கும் இடையில் நடந்த சம்பாஷணையின் மூலம் இதை உறுதி செய்கிறார்.


அர்ஜுனனுக்கு கண்ணன் அத்தனை முக்கியத்துவம் கொடுத்ததற்கு காரணம் அவர்கள் இருவரும் சமவயது ஒத்தவர்களாக இருந்ததே என்கிறார். அவர்களின் நட்பின் ஆழத்தை, “எனக்கு யார் இல்லாவிட்டாலும் பரவாயில்லை; அர்ஜுனன் இல்லையென்றால் என்னால் ஜீவிக்க முடியாது. அதே போல்தான் நான் இல்லாவிட்டால் அர்ஜுனனும்என்று கண்ணன் கூறியதை கொண்டு சிறப்பிக்கிறார்.


பீஷ்மர் தான் எடுத்த சபத்ததின் மேல் இருந்த உறுதி தேவையற்றது என்று வாதிக்கிறார்.


அக்னிதேவன் பிராமண ரூபத்தில் வந்து காண்டவபிரஸ்தத்தில் இருந்த காட்டை உணவாகக் கேட்க, பாண்டவர்களுக்கும் வாழ்நிலம் அதிகமாக தேவைப்பட்டதால் அர்ஜுனனும் கிருஷ்ணனும் அதிலிருந்த எந்த உயிரினமும் தப்பிக்கமுடியாமல் (ஏழு பேர்களை தவிர) தீக்கிரையாக்கியது; அது சம்பந்தமான விளக்கங்கள்; இத் தீச் செயலில் இருந்து தப்பிக்கவிடப்பட்ட மாயா என்ற அரக்கனே பாண்டவர்களுக்காக இந்திரப்பிரஸ்தம் என்ற மாய மாளிகை கட்டிக்கொடுத்தது: அதில் பாண்டவர்கள் சில காலமே வாழ்ந்தது; எல்லாம் இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது.


இந்நூலைப் படித்ததில் இருந்து முக்கியமாக காந்தாரியைப் பற்றியும் மாயா அரக்கனைப் பற்றியும் எனக்கு தோன்றிய சில கருத்துக்களை கொடுக்கிறேன்.


காந்தாரி தனக்கு கணவனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருதாஷ்ட்ரனுக்கு கண்கள் தெரியாது என்று தெரிந்தபின் அவள் அவனுக்கு கண்ணுக்கு கண்ணாக இருந்து அவனுக்கு வழிகாட்டியாக விளங்காமல், ஏன் தன் கண்களிலும் துணியை கட்டிக்கொண்டு குருடானாள்?


உலகிற்காக வேண்டுமானால் கணவன் காணாத உலகத்தை தானும் காண விரும்பவில்லை என்று அவள் கூறிக்கொள்ளலாம். ஆனால் உண்மையில் அவள் தான் ஏமாற்றப்பட்டதிற்கு திருதாஷ்ட்ரனையும் அவனை சார்ந்தோரையும் பழிக்குப் பழி வாங்கவே இச்செயலை செய்திருப்பாளோ! என்று எனக்குத் தோன்றுகிறது.


அதுப்போலவே மாயா அரக்கன் எந்தவிதமான் உள்நோக்கமுமின்றி இந்திரபிரஸ்தத்தை கட்டிக்கொடுத்திருப்பானோ? என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது. ஏனெனில் பாண்டவர்கள் இங்கே பத்து வருடங்களுக்கும் குறைவாகத்தான் வாழ்ந்தார்கள். அவர்கள் இங்கே குடியேறியப் பிறகுதான், இதை துரியோதனன் காண வந்து, தடுமாறி வீழ்ந்து திரௌபதியின், பீமனின் ஏளனச் சிரிப்பில் அவமானப்பட்டு, பின் பழிவாங்கும் விதமாக பாண்டவர்களை சூதிற்கு அழைத்ததெல்லாம் அரங்கேறியது.


இந்தக் கண்ணாடி மாளிகையில் வேறு யாரேனும் தடுமாறி வீழ்ந்திருந்தால் (வீழ்ந்திருக்கலாம்) அப்போது திரௌபதியும் பீமனும் சிரித்திருந்தால் அச்சிரிப்பில் நிச்சயம் ஏளனம் இருந்திருக்காது. வீழ்ந்தவரும் அச்சிரிப்பை ஏளனமாக எடுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என்று எண்ணுகிறேன். நகைப்புக்குரிய விஷயமாகவே இருதரப்பிலும் இருந்திருக்கும்.


இம்மாளிகையை காண துரியோதனனை வரவைக்கும்படி இதைக் கட்ட வேண்டும். அதன் வியப்பில் அவனைத் தடுமாறி விழச்செய்ய வேண்டும். அவன் ஏளனச் சிரிப்பில் காயப்பட்டு, பொறாமை உணர்ச்சி மேலும் தூண்டப்பெற்று பாண்டவர்களைப் பழிவாங்க தீவிரமான வேறுவிதமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்றெல்லாம் மாயா நினைத்தே இம்மாளிகையை அதுப்போல் கட்டியிருப்பானோ என்று எனக்கு தோன்றுகிறது.


தன் வாழ்விடமான காட்டுபகுதியையும் அதிலிருந்த அனைத்து உயிரினங்களயும் எரித்துக் கொன்ற அர்ஜுனனையும் அவன் சமூகத்தாரையும் காட்டுப் பகுதியிலேயே போய் வாழும்படி (13 ஆண்டுகள் வனவாசம்) செய்ய வேண்டும் என்றே இந்திரப்பிரஸ்தத்தை உருவாக்கியிருப்பானோ என்ற சந்தேகம் உறுதிப்படுகிறது.


நிலப்பரப்பு போல் தோன்றிய நீர்ப்பரப்பில் துரியோதனன் வீழ்ந்ததைப் பார்த்துச் திரௌபதியும் பீமனும் சிரித்தார்கள். அதைக் கண்டு மாயாவும் சிரித்திருக்கலாம்!


இந்நூலை வெளியிட்டுள்ளோர்:

ஓரியண்ட் லாங்மன் லிமிடெட்,

160, அண்ணாசாலை, சென்னை - 600 002.

-ஸ்ரீசக்திப்ரியன்