Thursday, December 15, 2011

மதமாற்றம்

மதமாற்றம் பற்றி காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் உரைத்தது. (தெய்வத்தின் குரல் என்ற நூலில் இருந்து)

மதமாற்றம் செய்கிறவர்களை நாம் வெறுக்க வேண்டியதில்லை. கட்டாயப்படுத்தியாவது, ஆசை காட்டியாவது அவர்கள் அப்படிச் செய்ய முயலுவதன் காரணம், அவர்களுக்குத் தங்கள் மதமே பரமசத்தியம் என்ற நம்பிக்கை இருப்பதுதான். இதைப் பிறரும் ஏற்றால்தான் மற்றவர்களுக்குக் கதிமோட்சம் உண்டு. இப்படி அவர்கள் பிறருக்கு ஒரு நன்மையைச் செய்வதற்காகப் பலவந்தம், வசியம், பணம் ஆகியவற்றைப் பயன்படுத்தினால் கூடத் தவறில்லை என்ற நல்லெண்ணத்திலேயே அவர்கள் பிறமதத்தினரைத் தமது மதத்துக்கு மாற்றம் செய்ய முயலுகிறார்கள் என்றே வைத்துக் கொள்ளலாம்.

பலாத்காரம் அல்லது பணபலம் இவற்றை மேற்கொள்ளாத எல்லா மதங்களும், அவற்றின் குருமார்கள், போதகர்கள், பிரசாரகர்கள் ஆகியோரது குணத்தைக் கொண்டுதான் வளர்ந்திருக்கின்றன. ஒரு மதத்தின் பிரதிநிதியிடத்தில் வெளிவேஷம் மட்டும் இருந்தால் போதாது. எந்தத் தத்துவத்தைச் சேர்ந்தவராயினும், அவருக்கு சுயநல எண்ணமே இருக்கக் கூடாது. வெறுப்பு ஏற்படக்கூடாது. நல்லொழுக்கம் இருக்க வேண்டும். நல்ல தபஸ் இருக்க வேண்டும். சாந்தமும் கருணையும் நிரம்பி இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களுடைய குணவிசேஷத்தினாலேயே அவர்களைத் தேடி வருகிறவர்களுடைய தோஷங்களும் போய்விட வேண்டும்.

இப்படிப்பட்டவர்களை உண்டுபண்ணுவதே இப்போது நம்முடைய மதத்தைக் காக்கவும், தழைக்கச் செய்யவும் முக்கியமான வழியாகும். எதிர்ப்பிரச்சாரம் எதுவுமே தேவை இல்லை. மதநெறிகளை உயிரோடு வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிற பிரதிநிதிகள்தான் வேண்டும். இப்படிப்பட்டவர்களால்தான் நம்முடைய மதம் யுகயுகாந்திரமாகக் காப்பாற்றப்பட்டு வந்திருக்கிறது. இனியும் இப்படிப்பட்டவர்களால்தான் அது உயிர் வாழ வேண்டும்.

No comments:

Post a Comment