முனைவர் ஐராவதி கார்கே எனும் பெண் எழுத்தாளர் எழுதிய யுகாந்தா (மூலம்: மராத்திய மொழி) என்ற தமிழாக்க நூலை சமீபத்தில் படித்தேன். கவிஞரும், சிறுகதை ஆசிரியருமான திரு. அழகியசிங்கர் அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்.
மகாபாரதத்தின் சில கதாபாத்திரங்களை எடுத்துக்கொண்டு அதன்மூலம் மகாபாரதத்தின் எல்லா எல்லைகளையும் தொட்டிருக்கிறார். ’ஜெயா’ என்ற பெயரில்தான் முன்னதாக மகாபாரதம் இருந்ததாகவும் அதன்பின்னே பல இடைச்செருகல்கள் செய்யப்பட்டு மகாபாரதம் என்ற இதிகாசம் புனையப்பட்டதாகவும் கூறியுள்ளார். எங்கெங்கெல்லாம் இடைசெருகல்கள் செய்யப்பட்டிருக்கலாம் என்பதையும் கதாபாத்திரங்களை விவரிக்கும் போது அங்காங்கே விளக்கம் அளித்துள்ளார்.
கிருஷ்ணன் ராஜனிலிருந்து வாசுதேவனாக மாறியதையும் சொல்லியுள்ளார். கிருஷ்ணன் தன்னை வாசுதேவனாக அழைக்கப்படுவதையே விரும்பியுள்ளான் என்றும் தெரிவிக்கிறார்.குந்தி, மாத்ரி, காந்தாரி, திரௌபதி என்ற பெண்களைப் பற்றி வெளிப்படையாக மகாபாரதம் பேசியுள்ளது என்கிறார்.
பாண்டுவின் முதல் மனைவி என்ற அடிப்படையில் அவன் இறந்த போது குந்தி உடன்கட்டை ஏறாமல் மாத்ரியை (அவளே எடுத்த முடிவு ஆயினும்) உடன்கட்டை ஏறவிட்டது; காந்தாரத்திலிருந்து சகுனியோடு அஸ்தினாபுரம் வந்தபின்தான் காந்தாரிக்கு தனக்கு மணமுடிக்கப் போகும் மன்னன் திருதாஷ்ட்ரனுக்கு கண் குருடு என்பதை தோழிமூலம் அறிந்து மயங்கிவீழ்ந்தது; சபையின் நடுவே தன்னைக் கொண்டு வந்தபின் ’தன்னை தோற்றபின் தருமன் என்னை பந்தயம் வைத்தானா? தன்னை இழந்தபின் என்னை பந்தயம் வைக்க அவனுக்கு அருகதை உள்ளதா?’ என்று கேள்விகள் கேட்டு சபையில் இருந்த பெரியோர்கள் எல்லோரையும் திரௌபதி சங்கடத்தில் உள்ளாகியது; என்று பெண்களுக்கு அன்று இருந்த நிலையைப்பற்றி தெளிவாக விளக்கமளித்துள்ளார்.
விதுரனை எமனின் அம்சமாக கூறியுள்ளார். விதுரன் சூதப்பெண்மணிக்கு பிறந்ததால் அரசவையில் இரண்டாம் கட்ட நிலையிலேயே அவன் வைக்கப்பட்டு இருந்ததை அவன் எந்த விகற்பமும் இல்லாமல் ஏற்றுக்கொண்டு எப்பொழுதும் சமநிலையில் இருந்துள்ளாதாக தெரிவிக்கிறார். இருப்பினும் பாண்டவர்களுக்கு கௌரவர்களால் ஆபத்து ஏற்படும் என்று நினைத்தபோதெல்லாம் அதை தடுக்க முயற்சித்துள்ளதாகவும் சொல்கிறார்.
விதுரனுக்கும் குந்திக்குமாக பிறந்தவனே தருமன் என்று ஒரு புதிய கோணத்தை காட்டுகிறார். விதுரன் இறக்கும் தருவாயில் தருமனுக்கும் அவனுக்கும் இடையில் நடந்த சம்பாஷணையின் மூலம் இதை உறுதி செய்கிறார்.
அர்ஜுனனுக்கு கண்ணன் அத்தனை முக்கியத்துவம் கொடுத்ததற்கு காரணம் அவர்கள் இருவரும் சமவயது ஒத்தவர்களாக இருந்ததே என்கிறார். அவர்களின் நட்பின் ஆழத்தை, “எனக்கு யார் இல்லாவிட்டாலும் பரவாயில்லை; அர்ஜுனன் இல்லையென்றால் என்னால் ஜீவிக்க முடியாது. அதே போல்தான் நான் இல்லாவிட்டால் அர்ஜுனனும்” என்று கண்ணன் கூறியதை கொண்டு சிறப்பிக்கிறார்.
பீஷ்மர் தான் எடுத்த சபத்ததின் மேல் இருந்த உறுதி தேவையற்றது என்று வாதிக்கிறார்.
அக்னிதேவன் பிராமண ரூபத்தில் வந்து காண்டவபிரஸ்தத்தில் இருந்த காட்டை உணவாகக் கேட்க, பாண்டவர்களுக்கும் வாழ்நிலம் அதிகமாக தேவைப்பட்டதால் அர்ஜுனனும் கிருஷ்ணனும் அதிலிருந்த எந்த உயிரினமும் தப்பிக்கமுடியாமல் (ஏழு பேர்களை தவிர) தீக்கிரையாக்கியது; அது சம்பந்தமான விளக்கங்கள்; இத் ’தீ’ச் செயலில் இருந்து தப்பிக்கவிடப்பட்ட மாயா என்ற அரக்கனே பாண்டவர்களுக்காக இந்திரப்பிரஸ்தம் என்ற மாய மாளிகை கட்டிக்கொடுத்தது: அதில் பாண்டவர்கள் சில காலமே வாழ்ந்தது; எல்லாம் இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது.
இந்நூலைப் படித்ததில் இருந்து முக்கியமாக காந்தாரியைப் பற்றியும் மாயா அரக்கனைப் பற்றியும் எனக்கு தோன்றிய சில கருத்துக்களை கொடுக்கிறேன்.
காந்தாரி தனக்கு கணவனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருதாஷ்ட்ரனுக்கு கண்கள் தெரியாது என்று தெரிந்தபின் அவள் அவனுக்கு கண்ணுக்கு கண்ணாக இருந்து அவனுக்கு வழிகாட்டியாக விளங்காமல், ஏன் தன் கண்களிலும் துணியை கட்டிக்கொண்டு குருடானாள்?
உலகிற்காக வேண்டுமானால் கணவன் காணாத உலகத்தை தானும் காண விரும்பவில்லை என்று அவள் கூறிக்கொள்ளலாம். ஆனால் உண்மையில் அவள் தான் ஏமாற்றப்பட்டதிற்கு திருதாஷ்ட்ரனையும் அவனை சார்ந்தோரையும் பழிக்குப் பழி வாங்கவே இச்செயலை செய்திருப்பாளோ! என்று எனக்குத் தோன்றுகிறது.
அதுப்போலவே மாயா அரக்கன் எந்தவிதமான் உள்நோக்கமுமின்றி இந்திரபிரஸ்தத்தை கட்டிக்கொடுத்திருப்பானோ? என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது. ஏனெனில் பாண்டவர்கள் இங்கே பத்து வருடங்களுக்கும் குறைவாகத்தான் வாழ்ந்தார்கள். அவர்கள் இங்கே குடியேறியப் பிறகுதான், இதை துரியோதனன் காண வந்து, தடுமாறி வீழ்ந்து திரௌபதியின், பீமனின் ஏளனச் சிரிப்பில் அவமானப்பட்டு, பின் பழிவாங்கும் விதமாக பாண்டவர்களை சூதிற்கு அழைத்ததெல்லாம் அரங்கேறியது.
இந்தக் கண்ணாடி மாளிகையில் வேறு யாரேனும் தடுமாறி வீழ்ந்திருந்தால் (வீழ்ந்திருக்கலாம்) அப்போது திரௌபதியும் பீமனும் சிரித்திருந்தால் அச்சிரிப்பில் நிச்சயம் ஏளனம் இருந்திருக்காது. வீழ்ந்தவரும் அச்சிரிப்பை ஏளனமாக எடுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என்று எண்ணுகிறேன். நகைப்புக்குரிய விஷயமாகவே இருதரப்பிலும் இருந்திருக்கும்.
இம்மாளிகையை காண துரியோதனனை வரவைக்கும்படி இதைக் கட்ட வேண்டும். அதன் வியப்பில் அவனைத் தடுமாறி விழச்செய்ய வேண்டும். அவன் ஏளனச் சிரிப்பில் காயப்பட்டு, பொறாமை உணர்ச்சி மேலும் தூண்டப்பெற்று பாண்டவர்களைப் பழிவாங்க தீவிரமான வேறுவிதமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்றெல்லாம் மாயா நினைத்தே இம்மாளிகையை அதுப்போல் கட்டியிருப்பானோ என்று எனக்கு தோன்றுகிறது.
தன் வாழ்விடமான காட்டுபகுதியையும் அதிலிருந்த அனைத்து உயிரினங்களயும் எரித்துக் கொன்ற அர்ஜுனனையும் அவன் சமூகத்தாரையும் காட்டுப் பகுதியிலேயே போய் வாழும்படி (13 ஆண்டுகள் வனவாசம்) செய்ய வேண்டும் என்றே இந்திரப்பிரஸ்தத்தை உருவாக்கியிருப்பானோ என்ற சந்தேகம் உறுதிப்படுகிறது.
நிலப்பரப்பு போல் தோன்றிய நீர்ப்பரப்பில் துரியோதனன் வீழ்ந்ததைப் பார்த்துச் திரௌபதியும் பீமனும் சிரித்தார்கள். அதைக் கண்டு மாயாவும் சிரித்திருக்கலாம்!
இந்நூலை வெளியிட்டுள்ளோர்:
ஓரியண்ட் லாங்மன் லிமிடெட்,
160, அண்ணாசாலை, சென்னை - 600 002.
-ஸ்ரீசக்திப்ரியன்