Friday, April 2, 2010

ஈஸ்வரனே குருநாதன்

குருநாதர் என்று ஒருவரை வரித்து விடுகிறோம். பிறகு அவர் அப்படிக் குருநாதராக இருப்பதற்கு தகுதி இல்லாதவர் என்று தெரியவருகிறது. அதன்பின் அவரைத் தொடர்ந்து குருநாதராக ஏற்று கொள்ளுவது சரியாகுமா? இல்லையானால் என்ன செய்வது?

குரு வேண்டும் என்று தேடினோம். சுத்தமானவர், பூர்ணமானவர் என்று ஆராய்ந்தோம். இவரை நம்பி ஆச்ரயித்தோம். கிட்டே வந்தபிறகு அப்படி இல்லை என்பது தெரிகிறது. தெரிந்திருந்தால் வந்தே இருக்க மாட்டோம். இன்னொருவரிடம் இப்போது போகலாம் என்றால் பயமாக இருக்கிறது. இன்னொரு பயம், குரு என்று ஒருவரைப் பாவித்துவிட்டு இன்னொருவரை நாடிப்போனால், பாதிவ்ரத்ய தோஷம் போல (கற்பில் தவறுதலைப் போல) குருத்துரோகம் என்ற பழி வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. இப்படிப்பட்ட சங்கடங்கள் ஏற்படுவதுண்டு. அப்போது என்ன செய்ய என்பதை தோன்றுகிற மாதிரி சொல்கிறேன்.

இந்த நிலையில் ஒரே தீர்வு குருவின் யோக்கியதாம்சத்தைப் பார்க்காமல் இருந்து விடுவதுதான் என்று தோன்றுகிறது. நாம் குருவைத் தேடினபோது இவர்தான் கிடைத்து – இவரைத்தான் வரணம் செய்ய வேண்டி இருந்தது என்றால், ஈசுவரனே இவரைத்தான் நமக்குக் குருவாக அனுப்பி வைத்திருக்கிறான் என்று அர்த்தம். குருவை ஈசுவரன் அனுப்பினான் என்பதல்லாமல், குருவாக ஈசுவரனே வந்தருளி இருக்கிறான் என்று பாவிக்க வேண்டும் என்றுதான் சாஸ்திரம் சொல்லுகிறது. இவர் மனுஷ்யகுரு என்று நினைக்கும் வரையில்தான், இவர் தோஷமானவரா – நிர்த்தோஷமானவரா என்று கேள்வி வருகிறது. இவரே ஈசுவரன் என்று நம்பிவிட்டால் இந்தக் கேள்விக்கே இடமில்லை. தோஷமுள்ள ஈசுவரன் என்று உண்டா என்ன? ஈசுவரனிடம் தோஷம் இருப்பதைப் போல நமக்குத் தோன்றினாலும், அதுவும் நம் திருஷ்டி தோஷம்தானே...? இவரே ஈசுவரன் என்று வைத்து விட்டால் இவரைவிட்டு இன்னொருவரிடம் போவதற்கும் இடம் இல்லை. ஈசுவரன் ஒருவர்தானே? ஓர் ஈசுவரனை விட்டு இன்னொரு ஈசுவரனிடம் போக நினைப்பது பரிகாசமான விஷயம் அல்லவா?
அதனால், குரு என்று அடைந்து விட்ட பிறகு, அவர் எப்படியானாலும் இருக்கட்டும் என்று நாம் நமது பக்தியில் இறங்காமல், சலிக்காமல் அவரையே உபாசித்து வரவேண்டும். சுச்ருஷை செய்ய வேண்டும். இப்படிப் பண்ணினால் கடைசியில் ஈசுவரன் அவர் மூலமாகவே நமக்குச் சக்தியை, ஞானத்தைக் கொடுத்து விடுவான். அவர் மோட்சத்துக்குப் போனாலும் போகாவிட்டாலும், நாம் நிச்சயமாக மோட்சத்துக்குப் போய்விடுவோம்.

- ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் (’தெய்வத்தின் குரல்’ என்ற நூலிலிருந்து)

No comments:

Post a Comment