Wednesday, March 24, 2010
வர்ணாசிரம தர்மம்
பக்தி இதழ்கள் இப்போது அதிக அளவில் வருகின்றது. விற்பனையும் ஆகின்றது. பக்தியினாலோ அல்லது சுவாரஸ்யமில்லாத வாழ்க்கையில் இருந்து தப்பித்துக் கொள்ளவோ அல்லது விஷய ஞானத்தை வளர்த்துக் கொள்ளவோ அல்லது எதனாலோ மக்கள் இந்த இதழ்களை வாங்கிக் குவிக்கிறார்கள்.
முன்பு ‘ஞானபூமி’ என்று ஒரு பக்தி இதழ் ‘இதயம் பேசுகிறது’ திரு.மணியன் அவர்களால் வெளியிடப்பட்டு வந்தது. அதன் ஒவ்வொரு இதழும் மிகச் சிறப்பாக விளங்கியது. முக்கியமாக கேள்வி-பதில் பகுதி. அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, ஞானியர்கள், யோகியர்கள், தத்துவவாதிகள், அறிவாளர்கள், ஆன்றோர்கள் மற்றும் சான்றோர்கள் ஆகியோரின் நூல்களில் இருந்து பதில் அளிக்கப்பட்டது.
அந்தக் கேள்வி-பதில்களை தொகுத்து இரண்டோ அல்லது மூன்று பகுதிகளாகவோ ‘வானதி பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது.
வர்ணாசிரம தர்மம் பற்றிய கேள்விக்கு ‘ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி பெரியவர்’ உரைத்த பதிலைக் காணுங்கள். வர்ணாசிரம தர்மத்தை பற்றி இவ்வளவு எளிமையாக யாரால் கூறவியலும்.
உலகத்தில் வேறு எந்த தேசத்திலும் வர்ணாசிரம தர்மம் என்பது இல்லை. இந்தியாவில் இந்து மதத்தில் மட்டுமே இது இருக்கிறது. அந்த நாடுகள் நல்ல நிலையில் வளர்ச்சி பெறவில்லையா? நமக்கு மட்டும் இது அவசியம் என்று நினைப்பானேன்?
வி. சுந்தரேசன், திருமங்கலம்.
மேல்நாடுகளும் தொழில் பிரிவினை (Division of Labour) என்று பொருளாதாரத்தில் சொல்லிக் கொண்டு இன்றும் அதை நடைமுறையில் கொண்டுவர முடியாமல் சிரமப்படுவதைப் பார்க்கிறோம். இதற்கு ஒரு விகிதாச்சாரத்தில் ஒவ்வொரு தொழிலுக்கும் ஜனங்கள் வந்தால்தான் சமுதாயம் சீராக அமைய முடியும். இந்தத் தொழில் பங்கீட்டைப் பாரம்பரியமாக வைத்து நடத்திவந்த நமது தேசத்தில் அந்த ஒழுங்கு குலைகிறவரையில் சாந்தியும், சந்தோஷமும், திருப்தியும் இருந்து வந்தன. இப்போது அந்த அமைதி சமூகத்தில் இல்லை. அதற்குக் காரணம், நாம் மேல்நாட்டு நாகரிக முறைகளைப் பின்பற்றி இதை மாற்ற முயன்றதுதான்.
இப்போது நம் தேசம் எப்படி இருக்கிறது? ஒழுங்கீனம், பொய், புரட்டு, லஞ்சம், விபசாரம் எல்லாம் தலைதூக்கிவிட்டன. எங்கே பார்த்தாலும் வேலை நிறுத்தம், கிளர்ச்சி என்பது தெரிகிறது. எதனால் இப்படி ஆயிற்று? எதை விட்டதால் நமக்கு இந்தப் பலவீனம் வந்தது? இதை ஆலோசித்துப் பார்த்தால், மற்ற தேசங்களில் இல்லாத வர்ணதர்மம் இங்கே இருந்த வரையில் நம்முடைய நாகரீகம் மட்டும் உறுதியாக, மற்ற தேசங்கள் போற்றும் வகையில் காப்பாற்றப்பட்டு வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
இந்த தேசத்தில் மட்டுமாவது ஆத்மசிந்தனைக்கும், தெய்வ அனுபவத்துக்கும், கலைகளுக்கும், உத்தமமான பண்புகளுக்கும் அனுகூலமான ஒரு நாகரீகம் இருக்க வேண்டும் என்று நமக்கு ஆசை இருந்தால், இவற்றுக்காக வர்ணதர்மமும் இருக்க வேண்டும். ‘இங்குமட்டும் இருப்பானேன்?’ என்றால், இங்குமட்டுமாவது இருந்தால்தான் உலகத்துக்கே ஒரு நல்ல உதாரணம் கிடைக்கும் என்று கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் போட்டிதான் உடனே பொறாமைதான்; அதிருப்திதான்; சமூகசச்சரவுதான். சௌகரியமான படிப்பு, தொழில் இவற்றுக்குத்தான் எல்லோரும் வரப்பார்ப்பார்கள். ஆனால் எல்லோருக்கும் சமூக அமைப்பு இடம்தர முடியாது. இப்போது பாருங்கள்; படித்தவர்களிடையே வேலை இல்லா திண்டாட்டம் வந்துவிட்டது. காலேஜ் அட்மிஷனில் ஏகப்பட்ட போட்டா போட்டிகள். ‘இஞ்சினீயரிங் கல்லூரிகள் அதிகமாகி விட்டன. அதனால் எல்லோருக்கும் வேலை கிடைப்பது சிரமம்!’ என்கிறார்கள். கல்லூரியிலும் வேலைகளிலும் வேறுவிதமான ஜாதி, வகுப்பு, பிரிவினைகளைக் கொண்டுவந்து கட்டுப்படுத்த வேண்டிய நிலைமையும், அதனால் மனக்கசப்பும் ஏற்பட்டிருக்கிறது. இதையே பாரம்பரியம் என்ற கட்டுப்பாடாக ஆதியில் வைத்தார்கள். அப்போது தொழில் இரத்தத்தில் ஊறி, அது எப்படிப்பட்டதானலும் அதைப் பெருமையுடன், ‘இது நம்முடைய பாட்டன் காலத்துச் சொத்து. இது நம் குலதனம்’ என்று சொல்லிக் கொண்டு செய்யும் நிறைவு இருந்தது. அந்தந்தத் தொழிலைச் செய்வதில் விசுவாசமும் இருந்தது. அதனால், அவற்றில் அதைச் செய்வோருக்குத் திறமையும் (Efficiency) இருந்தது. இன்றைக்கு ஒவ்வொருவரும் பணத்துக்காகவே என்று வந்துவிட்டால், தொழிலை, ஈடுபாடோ, விசுவாசுமோ இல்லாமல் செய்கிறான். அதனால் அதில் ஒழுங்கோ, நாணயமோ இருப்பதில்லை. முன்காலத்தில் பணம் இரண்டாம் பட்சம் விசுவாசத்தோடு தன் தொழில் என்ற திருப்தியோடு செய்தால் எல்லாக் காரியங்கும் நன்றாக நடந்தன. சமூகத்திலும் நல்ல அமைப்பு இருந்தது.
மனநிறைவு இல்லாமல் ஒரு நாகரீகமும் இல்லை. சமூகத்தில் அத்தனை பேருக்கும் இப்படிப்பட்ட நிறைவை ஏற்படுத்தித் கொடுத்த வர்ணதர்மம் என்ற உத்தமமான ஏற்பாட்டை நாம் குற்றம் சொல்லவே கூடாது.
-ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதீச்வர ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் – இங்கு மட்டும் இருப்பானேன்?’ என்ற கட்டுரையிலிருந்து –
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment