Sunday, December 9, 2012

இயற்கை அன்னை

கூந்தல் வருடும் தென்றல்
குற்றம் காணா தண்ணீர்
ஏந்தி சீராட்டும் பூமி
எப்போதும் விலகாத வானம்
அந்தி சிவப்பில்
அழகு காட்டும் கதிரவன்
வந்து இரவில் தாலாட்டும் சந்திரன்
அத்தனையும் நம்மை ஒன்றாய்
அணைக்கும்
இணைக்கும்
இயற்கை அன்னையின்
எழில் முகங்கள் அல்லவா!

-ஸ்ரீ சக்திப்ரியன்

Tuesday, March 27, 2012

தனிமை


தனிமைப்படுத்துகிறாயா?
அல்லது
தனிமைப்பட்டுக் கொள்கிறாயா?

தனித்திருப்பது தனிமையா?
தன்னில் தன்மை எனும்
உண்மையில் உறைவது தனிமையா?

தனிமையால் தெளிவு வருமா?
அல்லது
தெளிவு தனிமையைத் தருமா?

தனிமை தவமா?
தனிமையில் தவமா?
தனித்தல் தவமா?

தனித்து பிறக்கிறோம்
தனித்து இறக்கிறோம்-நடுவே
தவிப்பில் இருக்கிறோம்.
அன்றி
தனிப்பில் இருக்கிறோமா?

எல்லாரிலும் விலகுவதா தனிமை?
அல்லது
எல்லாமாய் இருப்பதா தனிமை?

உண்மை தனிமையில் உள்ளதா?
உண்மையில் தனிமை உள்ளதா?

-ஸ்ரீ சக்திப்ரியன்





Monday, February 27, 2012

என்றும் இன்றே

மறைந்த நேற்று
மறைந்திருக்கும் நாளை
திறந்திருக்கும் இன்றை திருடுகின்றன.

இறந்த நேற்று
பிறக்காத நாளை
உயிரோடு இருக்கும் இன்றின்
உணர்வை சிதைக்கின்றன.

அந்நியம் ஏதுமில்லை என்னும்
அநுபூதி கிட்டி நிலைத்துவிட்டால்
நேற்றில்லை நாளையில்லை
என்றும்
இன்றே

- ஸ்ரீசக்திப்ரியன்

Saturday, February 4, 2012

தனிமரம்

தனிமரம்
தோப்பாகாது
ஆனால்,
தோப்பில் இருக்கும்
ஒவ்வொரு மரமும்
தனிதான்!

Thursday, January 19, 2012

முக்தியின் நிலைகள்

புவியின் ஈர்ப்பு சக்திக்குள் இருக்கும் எந்த ஒரு பொருளும் அதனிடம் இருந்து தப்பித்து செல்லுதல் இயலாது. பூமி தன்னுடைய வசீகர சக்திக்குள்ளேயே அவற்றை வைத்துக் கொள்ளும். அது போலவே, எந்த ஒரு ஜீவன் தன்னை அடைய முயற்சிக்கிறதோ அதனை கடவுள் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு தனக்கு மிக அருகாமையில் வைத்துக் கொள்கிறார். மேலும், அந்த ஜீவனின் ஆன்மிக ஏற்றத்திற்கும் அக்கறை எடுத்துக் கொள்கிறார்.

ஜெயன், விஜயன் மற்றும் ராவணன், கும்பகர்ணர்களின் கதைகள் அவர்கள் தங்கள் முற்பிறப்பில் இறைவனிடம் காட்டிய பக்தியை மெச்சி இறைவன் அவர்களுக்கு அளித்த அருளை விளக்குவதாகவே உள்ளது.

இறைவன் அவர்களை இடுக்கண்ணில் இருந்து காத்தும், அவர்களது மிருக மற்றும் அசுர பிறப்பில் இருந்து விடுவித்தும், அவர்களை தெய்வீக நிலைக்கு உயர்த்தவும் செய்தார்.

விஷ்ணு, ஜெய விஜயர்களுக்கு ‘சாரூப்ய முக்தியை அருளியதாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. ஜீவர்களின் மேல் கடவுள் காண்பிக்கும் அன்பே முக்தி ஆகும்.

முக்தி ஐந்து நிலைகள் உடையதாக நமது அறநூல்கள் கூறுகின்றன. ‘சாலோக்யம்என்பதே முதல் நிலை; அங்கு பக்தன் கடவுளின் உலகத்திற்குள் நுழைய விழைகிறான். இறைவனின் ஆளுகைக்குள் அவனுக்கு ஒரு சிறிய இடம் தேவைப்படுகிறது. வேறு எந்தவிதமான தனிச்சலுகையோ அல்லது அண்மையையோ அவன் கேட்பதில்லை. தலைச்சிறந்த கன்னட கவியான திரு.பம்பா அவர்கள் தன்னுடைய கவிதை ஒன்றில் தான் பாணாவாசி எனும் நகரில் மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும் என்று பாடுகின்றார்.

இறைவன் மதுக்ஷேஸ்வரரின் எல்லைக்குள் அக்கவிக்கு ஒரு சிறு இடமே கிடைத்தாலும் போதும். அங்கே ஒரு தேனியாகவோ அல்லது குயிலாகவோ பிறப்பதில் அவருக்கு ஒரு பொருட்டும் இல்லை. கடவுளின் உலகத்திற்குள் நுழைவதைத் தவிர வேறு எந்தவிதமான ஆற்றலையோ அருகாமையையோ அவர் விரும்பவில்லை. இந்த வகையான பக்தியே ‘சாலோக்யம்ஆகும்.

ஒரு பெங்காலி பக்திப் பாடல் இதே விதமான உணர்வு நிலையை நமக்கு காட்டுகிறது. அது பின்வருமாறு சொல்லப்படுகிறது. அம்மா, உனது கோவிலின் ஏதேனும் ஒரு சிறு மூலையில் அமர்ந்து கொள்ள என்னை அனுமதி. நானோ ஒரு பாவியானபடியால் உன்னருகில் வரமாட்டேன். நான் வெகு தூரத்தில் இருப்பேன்; ஆனால், உன்னை நினைத்துக் கொண்டிருப்பேன்.

அம்மா, நான் உன் பாதங்களைத் தொட விழையவில்லை; ஆனால், கண்ணீரால் நிறைந்திருக்கும் என் கண்களுக்கு உன் சிவந்த தாமரை பாதங்களைக் காணும் பாக்கியத்தை கொடுத்தருள். அம்மா, ஆரத்தி காட்டும் பொழுதில் உன் முகத்தில் பூக்கும் ஆன்மாவை நிறைக்கும் புன்னகையை நான் காண்பேனாக”.

இவ்விதமான சாலோக்ய பக்தியே சாலோக்ய முக்தியை நோக்கி வழி நடத்துகிறது. கோவிலில் தெய்வத்திற்கு முன்னால் அமர்ந்தே தீர வேண்டும் என்று விரும்புவர்களுக்கும், அதற்காக சிறப்புச் சலுகை வேண்டி சச்சரவு செய்பவர்களுக்கும் உண்மையில் கடவுளின் தரிசனத்தைவிட தங்களுடைய படோபடத்தைக் காட்டிக் கொள்வதில்தான் விருப்பம் மிகுந்தவர்களாக உள்ளார்கள். அத்தகைய மக்கள் உண்மையில் கடவுளிடமிருந்து வெகு தூரத்தில் உள்ளார்கள்.

முக்தியின் இரண்டாவது நிலை சாமீப்யம் ஆகும். அதாவது கடவுளுக்கு வெகு அருகாமையில் இருக்க விரும்புவதாகும்.

தன்னை வேறெதையும்விட அதிகமாக நேசிக்கும் பக்தனுக்கு செல்வத்தையும், தனித்தன்மையும் மற்றும் உயர்ந்த நிலையையும் இறைவன் கொடுக்கும் ‘சாஷ்டிகம் முக்தியின் மூன்றாவது நிலையாகும்.

சாரூப்யம்என்பதே முக்தியின் நான்காம் நிலையாகும். இந்நிலையில் பக்தன் நற்பண்புகளையும் கடவுளின் தெய்வீக குணங்களையும் பெறுகிறான்.

கடவுளுடன் ஒன்றாக கலக்கும் சாயுஜ்யம்என்ற நிலையே முக்தியின் ஐந்தாவதும் கடைசி நிலையுமாகும். கடவுளிடமிருந்து எவ்விதத்திலும் பிரிவற்று இருக்கும் அத்வைத நிலையே இந்நிலையாகும்.

சாதாரணமாக, முக்தி என்பது இறப்பிற்கு பின்பு மட்டுமே அனுபவிக்க முடியும் என்று நாம் எண்ணுகிறோம். அது உண்மை என்றால், முக்தியைப் பற்றி இப்பொழுது நாம் கற்பதில் என்ன பயன் இருக்க முடியும். ஆனால், நம்முடைய வாழ்நாளிலேயே முக்தியின் முன் அனுபவத்தை கடவுள் நமக்கு வழங்குகிறார். நாம் யாராவது ஒருவரை மிகவும் அதிகமாக விரும்பினோமேயானல் முக்தியின் எல்லாநிலைகளையும் நம்மால் அனுபவிக்க முடியும்.

’உபநிஷத்’ என்னும் வடமொழி சொல்லுக்கு ’அருகில் அமர்’ என்பதே பொருள் ஆகும்.

குருவும் சிஷ்யனும் ஒருவருக்கு ஒருவர் அருகாமையில் அமரும் பொழுது அறிவு பெருகும்.

முதலில் நாம் விரும்பும் மக்களின் உலகத்திற்குள் நுழைய வழி தேடுகிறோம். இது சாலோக்யம் ஆகும். அடுத்து, நாம் அவர்களுடன் நெருங்கி பழக விரும்புகிறோம். இதுவே சாமீப்யம். குரு-சிஷ்ய உறவில் கூட இந்த நிலைகளெல்லாம் காணப்படுகின்றது.

நமக்கு விருப்பமான ஒருவரிடமே நமது மகிழ்ச்சியையும் அவ்வகை அல்லாத நிலைகளையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். நமது அன்பை வெளிப்படுத்த அவர்களுக்கு பரிசுகள் கொடுக்கிறோம். இதுவே சாஷ்டிகம். நாம் விரும்புவர்களின் எண்ணங்களையும், இயல்புகளையும் மற்றும் உணர்வுகளையும் ஏற்றுக் கொண்டு அவர்களைப் போலவே உருவாகிறோம். இதுவே சாரூப்யமாகும்.

நாம் விரும்பவருடன் எப்பொழுதும் விலகாமல் இருக்கவே விரும்புகிறோம். இதுவே சாயுஜ்யமாகும்.

இவ்வழியில் கடவுளை நாம் நேசிக்கத் துவங்கினால் - நம் இதயமும் ஆன்மாவும் இறைவனுடன் ஒன்றாக கலக்க ஏங்கும் நிலையோடு – வாழ்க்கைப் பயணத்தில் நம்முடைய இலக்கை அடைவது திண்ணம். மேலும், முக்தியை இப்பிறப்பிலும் அதன் பின்னும் நம்மால் துய்க்க முடியும்

- ஸ்ரீமஜ்ஜகத்குரு சங்கராசார்யர்

- தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் – சிட்டி எக்ஸ்பிரஸ்

- 17.1.2012

Tuesday, January 17, 2012

பாதை

சாலையில்
போக்குவரத்து நெரிசல்
எவ்வளவுதான் இருந்தாலும்
எனக்குரிய பாதையும்
அங்கேயேதான் உள்ளது.

-ஸ்ரீசக்திப்ரியன்